அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது ஏன்? – முதல்வர் விளக்கமளிக்க பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

0
60

இந்தியாவில் அரிசி உற்பத்தியில் 2-வது இடத்தில் இருந்த தமிழகம் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது ஏன்? என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மூத்த நிர்வாகி ஏ.வி.துரைராஜ் தலைமையில் நாகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

காவிரி டெல்டாவில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்தியாவில் அரிசி உற்பத்தியில் 2-வது இடத்தில் இருந்ததமிழகம், தற்போது 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் வேளாண் உற்பத்தி பின்னடைவை சந்தித்து வருகிறது. வேளாண் துறை இயக்குநர், விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதுடன் வேளாண் துறை செயல்பாடுகளையும் முடக்கி வருகிறார். எனவே, அவரை உடனடியாக பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.

அதேபோல, தமிழகத்தின் நீராதார உரிமைகள் பறிபோவதற்கு பொறுப்பேற்று நீர்ப்பாசனத் துறை செயலாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். நீர்ப்பாசன முறைகளில் புலமை வாய்ந்த மூத்த அதிகாரியை செயலாளராக நியமிக்க வேண்டும்.

கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தண்ணீரை வழங்க வலியுறுத்தி ஜூன்10-ம் தேதி பூம்புகாரில் இருந்து மேட்டூர் அணை நோக்கி பேரணிசெல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.தர், மாநில துணைச்செயலாளர் எம்.செந்தில்குமார், நாகை மாவட்ட தலைவர் புலியூர்பாலு, செயலாளர் தலைஞாயிறு கமல்ராமன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here