திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி எனபல மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்தபோது, 1929-ம் ஆண்டு, ‘தி பாம்பேபர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்’ (பிபிடிசி) என்ற நிறுவனத்துக்கு, 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. வரும் 2028-ம் ஆண்டுடன் குத்தகை நிறைவு பெறும் நிலையில், அந்த இடத்துக்கு ராயத்து வரி பட்டா வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றம், பின்னர் உச்ச நீதிமன்றம் என பிபிடிசி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் தேயிலைத் தோட்டத்தில் உற்பத்தியை நிறுத்தவும், அங்குள்ள தொழிலாளர்களை நீக்கம் செய்யவும், தேயிலைத் தோட்ட நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களிடம் விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, வரும் 15-ம் தேதிக்குள் அவர்கள் அதில் கையெழுத்திடுமாறு அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இதனிடையே, மாஞ்சோலை தேயிலை தோட்டம் மக்கள் நலச்சங்கம் சார்பில், திருநெல்வேலியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்,விடுதலை சிறுத்தை கட்சி, அமமுக உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
‘மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாகம் வலுக்கட்டாயமாக தொழிலாளர்களிடம் விருப்ப ஓய்வு கடிதம் பெறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்துக்குப்பின் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் கூறியதாவது:
மாஞ்சோலையில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக நிறுவப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருப்பதையும், படிக்கும் மாணவர்களை வெளியே சென்று படிக்க வற்புறுத்துவதையும் கைவிட வேண்டும். வரும் 7-ம்தேதி, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளோம். மேலும் அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டு வரும் 8-ம் தேதி மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களைச் சந்தித்து, அடுத்த கட்டநடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம் என்று கூறினார்.