தமிழக அரசின் நிர்வாக சாதுரியத்தால் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

0
150

திராவிட மாடல் ஆட்சியின் சாதுரியத்தால்தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம் என, தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் பகுதியில் நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்தார். சட்டப்பேரவை தலைவர்அப்பாவு, அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கனமழையால் பாதிக்கப்பட்ட 2,21,815 பேருக்கு, ரூ.423.95 கோடி மதிப்பிலான நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பெரு வெள்ளம், அதி கனமழை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியபோது அமைச்சர்கள், அதிகாரிகளை அனுப்பி உடனே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம்.

அதனால்தான் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் விரைவாக சரிசெய்யப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் அணைக்கட்டுகள், குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் 288 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் ரூ.66.45 கோடியில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. இவற்றை நிரந்தரமாக சரிசெய்ய ரூ.145.58 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 802 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் ரூ.27.68 கோடி மதிப்பில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டன. நிரந்தரமாக சரிசெய்ய ரூ.15.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன.

இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் நாட்டின் செம்கார்ப் என்ற நிறுவனம் ரூ.36 ஆயிரம்கோடி முதலீட்டிலும், மலேசியாவின்பெட்ரோநாஸ் என்ற நிறுவனம் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டிலும்தூத்துக்குடியில் தொழிற்சாலைகளை அமைய உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டாடா பவர் நிறுவனம் ரூ.2,800 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. இதன்மூலம் அப்பகுதியைச் சேர்ந்த 1,800 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இரண்டு மாபெரும் இயற்கை பேரிடர்களை கடந்த டிசம்பர் மாதம்சந்தித்தோம். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசிடம் ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை.

மத்திய அரசு பாராமுகம்: தேர்தல் வரப்போகிறதே, தமிழகமக்களை சந்திக்க வேண்டுமே என்றபயம் கொஞ்சம் கூட இல்லாமல் மத்திய அரசும், நிதியமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள். நாம் இதைக் கேட்டால், ‘உங்களிடம் சாதுரியம் இருந்தால் நீங்கள் சாதித்துக் கொள்ளலாமே’ என்று மத்திய நிதி அமைச்சர் மிகவும் ஆணவமாக பேட்டி அளித்திருக்கிறார். இது அவர் வகிக்கின்ற பதவிக்கு அழகல்ல.

எங்களிடம் சாதுரியம் இருப்பதால்தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டியிருக்கிறோம்.

பாஜக அரசின் இடைக்கால தடைகளைத் தாண்டியும் பல வெற்றியை பெற்று வருகிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மனோதங்கராஜ், தூத்துக்குடி மேயர்ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவைஉறுப்பினர்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, ஊர்வசி செ.அமிர்தராஜ், அப்துல் வஹாப், திருநெல்வேலி ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here