ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும்: ஜெலன்ஸ்கி

0
46

ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போரில் உக்ரைனின் 25 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள்தீவிர முயற்சி எடுத்தும், இதுவரைசுமுக தீர்வை எட்ட முடியவில்லை.இந்த சூழலில், பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி அரசுமுறை பயணமாக போலந்துக்கு சென்றார். அங்கிருந்து அவர் நேற்று சிறப்பு ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார். ரயில் நிலையத்தில் அவரை உக்ரைனின் உயர்நிலை தலைவர்கள், இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.தொடர்ந்து மரின்ஸ்கி அரண்மனையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், பிரதமர் மோடியும் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது, உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அந்த சந்திப்பு மிக நன்றாக அமைந்தது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக எனது கருத்துகளை முன்வைத்தேன். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை பல உலக நாடுகளும் நிறுத்திவிட்டன. இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதனை இந்தியா நிறுத்தினால் புதின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். புதினுடைய பொருளாதாரம் ஆயுதம் சார்ந்தது. அவருடைய கரங்களை இந்தியா, சீனா எண்ணெய் இறக்குமதி வலுவாக்கின்றன. அந்த வகையில் ரஷ்ய ஆயுதப்படையை பலப்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும்.

இந்தியா நினைப்பதுபோல் புதின் இந்தியாவை மதிக்கவில்லை. அவ்வாறு மரியாதை கொண்டிருந்தால் ரஷ்யாவுக்கு மோடி வந்துள்ள நிலையில் உக்ரைன் மருத்துவமனையை ரஷ்யப் படைகள் தகர்த்திருக்காது.

இந்தியா எங்களின் பக்கம் நிற்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நடுநிலை காப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவின், இந்தியர்களின் அணுமுறை மாறினால் ரஷ்ய போர் நிச்சயம் முடிவுக்கு வரும். இந்தியாவுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. இந்தியா நினைத்தால் போர் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.ஜெலன்ஸ்கியிடம் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து ஜெலன்ஸ்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஜெலன்ஸ்கி, “அப்படி யாரும் சிறைப்பிடிக்கப்படவில்லை. அதுபற்றிய தகவல் எனக்குத் தெரிந்தால் நான் அவர்களை விடுவிப்பேன்” என்றார்.

அதேபோல் ஐ.நா. தீர்மானங்களில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு ஜெலன்ஸ்கி, “அது பற்றி மோடியுடனான சந்திப்பில் ஏதும் பேசவில்லை. பழசை திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் இந்திய அதரவை எதிர்ப்பார்க்கிறோம்.” என்றார்.

ஜெய்சங்கர் விளக்கம்: ஜெலன்ஸ்கியின் கருத்து குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். அதில், “ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதை உக்ரைன் பிரச்சினையாக எழுப்பியது. நாங்கள் தற்போதைய எரிசக்தி சந்தை சந்தித்துவரும் சவால்களை கூறியதோடு, உள்நாட்டில் எரிபொருள் விலையை கட்டுப்படியாகும்படி நிலையானதாக வைக்க ரஷ்ய எண்ணெய் கொள்முதல் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்தோம்” எனக் கூறியுள்ளார்.

பிரதமர் பேசியது என்ன? முன்னதாக ஜெலன்ஸிகியுடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி, “உக்ரைனுக்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளேன். ஆகஸ்ட் 24-ம் தேதி உக்ரைன் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உக்ரைனில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதில் மற்ற நாடுகளைவிட இந்தியா 2 அடி முன்னால் இருக்கிறது. போரில் உயிரிழந்த குழந்தைகளை நினைக்கும்போது மனம் துடிக்கிறது. நாகரிகமான சமுதாயத்தில் குழந்தைகள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

எந்த ஒரு போரிலும் இந்தியா நடுநடுலையை கடைபிடிப்பது கிடையாது. இந்தியா எப்போதுமே அமைதியின் பக்கம் நிற்கிறது. நாங்கள் புத்தர், காந்தியடிகள் பிறந்த மண்ணை சேர்ந்தவர்கள். அவர்கள் காட்டிய வழியில் உலகத்துக்கு அமைதியை போதித்து வருகிறோம்.

உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே 140 கோடி இந்தியர்களின் விருப்பம். ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசியபோது, ‘‘இது போருக்கான காலம் கிடையாது’’ என்று நேரடியாக கூறினேன். இப்போதும் அதே கருத்தை முன்வைக்கிறேன்” என்றார்.

பிரதமர் மோடியின் பயணத்தின் மூலம் இந்தியா – ரஷ்யாவிடம் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here