வினேஷ் போகத்: வலிகள் நிறைந்த ஒலிம்பிக் பாதை… 

0
60

3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்தவீராங்கனையான வினேஷ் போகத், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். கடந்த ஓராண்டாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தினார்.

எப்போதும் 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சில மாதங்களுக்கு முன்பு அந்த பிரிவில் விளையாடுவதற்கு மற்றொரு இந்திய வீராங்கனை அன்டிம் பங்கல் தகுதி பெற்றதால் 50 கிலோ எடைப் பிரிவுக்கு மாறி, தனது எடையை குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். 100 கிராம் எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் பயணம் வலிகள் நிறைந்ததாகவே தொடங்கியது.2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் அறிமுகமான வினேஷ் போகத், கால் இறுதி சுற்றின் போது முழங்காலில் காயம் அடைந்தார். வலியால் துடித்த அவரை ஸ்டிரெச்சரில் அமர்த்தி சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்த தொடரில் உத்வேகத்துடன் காணப்பட்ட அவர், நிச்சயம் பதக்கம் வெல்லக்கூடியவராக கருதப்பட்டிருந்தார். ஆனால் கண்ணீர் மல்க அவர், வெளியேற வேண்டிய நிலை உருவானது.இதன் பின்னர் கரோனா பெருந்தொற்று காலத்தில் நடத்தப்பட்ட 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வினேஷ் போகத் சரியான முறையில் தயாராகாததால் கால் இறுதி சுற்றில் தோல்வி அடைய நேரிட்டது. இதைத் தொடர்ந்து நடப்பு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த முறையில் தயாராவதில் வினேஷ் போகத் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார். பிரிஜ் பூசணுக்கு எதிராக ஒரு மாதத்துக்கும் மேலாக தெருவில் இறங்கி அவர், போராடினார். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் அவர், 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். எனினும் முரண்பாடுகளை கடந்து தனது எடையை 50 கிலோவுக்கு குறைத்து மல்யுத்த களத்துக்கு தயாரானார். ஆனால் பதக்கத்தை முத்தமிட காத்திருந்த இறுதிக்கட்டத்தில் ‘விதி’ மீண்டும் வினேஷ் போகத்தை வீழ்த்திவிட்டது.‘இதற்கு மேல் தெம்பு இல்லை மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ – வினேஷ் போகத் அதிரடி அறிவிப்பு

விதியின் கோரமான திருப்பத்தால் தனது நீண்டகால ஒலிம்பிக் கனவை நிறைவேற்ற முடியாத நிலையில் விரக்தியடைந்துள்ள இந்திய மல்யுத்தவீராங்கனையான வினேஷ் போகத், சர்வதேச மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதற்கு மேல் தன்னிடம் தெம்பு இல்லை என அவர், தெரிவித்துள்ளார்.

29 வயதான வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 கிலா எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்றிருந்தார். இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் வெல்வதை உறுதி செய்திருந்த நிலையில் எடைபரிசோதனையில் 100 கிராம் அதிகமாக இருந்ததால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வினஷ் போகத் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்,தனது எக்ஸ் வலைதள பதிவில், “அம்மா, மல்யுத்தம் வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் கனவுகள் மற்றும் எனது தைரியம் எல்லாம் உடைந்துவிட்டது. எனக்கு இப்போது தெம்பு இல்லை. மல்யுத்தத்துக்கு குட்பை. எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து வினேஷ் போகத், தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

எனினும், உலக மல்யுத்த கூட்டமைப்பு எடை பரிசோதனை விதிமுறை இப்போதைக்கு மாற்றப்படாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. உலக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் நெனாத் லலோவிக்கை, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா நேரில் சந்தித்து பேசியததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

இது ஒருபுறம் இருக்க 50 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சாரா அன் கில்ட்பிராண்ட், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். தோல்வி அடைந்த யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இவர் தான், அரை இறுதி சுற்றில் வினேஷ் போகத்திடம் வீழ்ந்திருந்தார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்ததால் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் இறுதிப் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here