கொண்டாடப்படாத ஹீரோ கிருணல் பாண்டியா!

0
92

2017 மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்ற போது இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் கிருணல் பாண்டியா. ஆர்சிபி அணி முதன் முறையாக கடந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற போதும் இறுதிப்போட்டி ஆட்ட நாயகன் கிருணல் பாண்டியா. நடப்பு சீசனிலும் பிரமாதமாக வீசி வருகிறார்.

ஸ்பின்னர் பவுன்சரை ஓர் பிரதான உத்தியாகப் பயன்படுத்துவதில் கிருணல் பாண்டியா இடது கை ஸ்பின் பவுலிங்குக்கு ஒரு புதிய பரிமாணத்தையே வழங்குகிறார் என்றால் மிகையாகாது. விக்கெட்டுகள் தேவைப்படும்போதெல்லாம் ஆர்சிபியின் ஆபத்பாந்தவராக வந்து விக்கெட் எடுத்துக் கொடுத்து வருகிறார் கிருணல் பாண்டியா.

இப்படிப்பட்ட கிருணல் பாண்டியாவை 2022 ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் விடுவித்து பெரிய தவறிழைத்து விட்டது. இவர் சிறந்த ஆல்ரவுண்டர். 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக 47 பந்துகளில் 73 நாட் அவுட் இன்னிங்ஸ் ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ். இதற்கு முன்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 2016ம் ஆண்டில் 86 ரன்களை விளாசியுள்ளார்.

சுமார் 140 ஐபிஎல் போட்டிகளில் 1740 ரன்கள் என்பது அவர் இறங்கும் டவுன் ஆர்டரை ஒப்பிடும் போது நல்ல ரன் எண்ணிக்கையே. இந்திய டி20 ஒருநாள் அணிகளில் இவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லை, காரணம் ரவீந்திர ஜடேஜா அளவுக்கு இவருக்குச் செல்வாக்கு இல்லை. அதே போல் அக்சர் படேல் அளவுக்கு இவருக்கு லாபி இல்லை.

அதனால் 5 ஒருநாள், 19 டி20 சர்வதேசப் போட்டிகளுடன் இவரது சர்வதேச கரியர் முடிவுக்கு வந்து விட்டது. இனி அது மீண்டும் உயிர்பெறுமா என்பது சந்தேகமே, நிச்சயம் கம்பீர் காலத்தில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்பின் செய்து ஸ்லோயர் ஒன்கள் வீசுவது போல் கிருணலின் ஸ்டாக் பந்து பவுன்சர்.

ஸ்பின்னர் பவுன்சர் வீசுவது நமக்குப் புதிதல்ல, ஷேன் வார்ன் சிலமுறை வீசியிருக்கிறார், கும்ப்ளே வீசியிருக்கிறார், ஆனால் இடது கை ஸ்பின்னர் பிரயோகிப்பது அதிசயமே. 2026 ஐபிஎல் தொடரில் கிருணல் பவுன்சரை ஓர் ஆயுதமாகவே மாற்றியுள்ளார். முதன் முதலில் ஹெல்மெட் அணியாத வெங்கடேஷ் அய்யருக்கு வீசி அவரை நிலைகுலையச் செய்தார் கிருணல்.

அடுத்த பந்துக்கு வெங்கடேஷ் அய்யர் ஹெல்மெட்டை வரவழைத்து அணிந்து கொண்டார். ஆனால் அடுத்த பந்தே கிருணல் அச்சரை வீழ்த்தினார். அதுமுதலே பவுன்சரை வீசுவது கிருணலின் ஒரு மிகச்சிறந்த ஆயுதமாகிவிட்டது.

இது தொடர்பாக அவர் முன்பு ஒரு பேட்டியில் கூறிய போது, “நான் ஏதோ திடீரென ஓவருக்கு இடையில் பவுன்சர் வீசுபவன் அல்ல.. பவுன்சரை வீசுவதென்பது எனது நன்கு சிந்திக்கப்பட்ட திட்டமிடுதலின் அங்கமாகவே இருந்துள்லது .. நான் என் பயிற்சியாளரிடமும் இதைத் தெரிவித்தேன், பவுன்சரில் விக்கெட் எடுக்கப் போகிறேன் என்றேன்.

வெங்கடேஷ் அய்யர் ஹெல்மெட் போடாமல் வந்து நான் பவுன்சர் போட்ட பிறகு ஹெல்மெட் போட்டார், அடுத்த பந்தே அவரை வீழ்த்திய போது நான் என்னை ஒரு வேகப்பந்து வீச்சாளராக உணர்ந்தேன். ஆனால் உள்ளபடியே கூற வேண்டுமெனில் நான் பவுன்சரை பயிற்சி எல்லாம் செய்யவில்லை. நேராக மேட்சில் அதைப் பயன்படுத்துகிறேன். ” என்று கூறும் கிருணல் பாண்டியா ‘பியூர் டேலண்ட்’, சிந்திக்கும் பவுலர்… இந்திய அணியில் இவரது சேவை நீண்ட காலம் நீடிக்காமல் போனதால் நட்டம் அவருக்கல்ல, இந்திய அணிக்குத்தான்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here