கடற்கரை பகுதிகளுக்கு செல்வதற்கான தடை ஆக. 11 வரை நீட்டிப்பு

0
140

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை ஆக. 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்குச் செல்ல ஏற்கெனவே ஆக. 7-ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆக. 8 முதல் 11-ஆம் தேதி வரைஅனைத்து கடற்கரைகளிலும் இயல்பைவிட கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும், காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல் 55 கிமீ வரையிலும் சில நேரங்களில் 65 கிமீ வரை அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

கடலில் பலத்த காற்று வீசுவதோடு, கடலோர பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதால் கடற்கரைப் பகுதிக்குச் செல்வதற்கான தடை ஆக. 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிக்குச் செல்லவோ, கடலில் குளிக்கவோ வேண்டாம்.

மீனவா்கள், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். படகுகளை பாதுகாப்பாக கரைகளில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here