இந்தியாவில் இருந்து ஏராளமான கலைப்பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. சுவாமி சிலைகள் உட்பட ஏராளமான அரிய பொருட்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட இந்திய கலைப்பொருட்களை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தினார். இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் அரிய கலைப்பொருட்கள் குறித்தும் பேசியுள்ளார். இதையடுத்து, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்களை அமெரிக்க அரசு மீண்டும் ஒப்படைத்துள்ளது. இவற்றையும் சேர்த்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 640 இந்திய கலைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 578 கலைப் பொருட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.நடராஜர் சிலை: கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்ட போது, 157 இந்திய கலைப் பொருட்களை அமெரிக்க அரசு ஒப்படைத்தது. அவற்றில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த நடராஜர் சிலையும் அடங்கும். அதேபோல் கடந்த 2023-ம் ஆண்டு 105 அரிய கலைப்பொருட்களை இந்தியாவிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்தது. இதேபோல் பிரிட்டனில் இருந்து 16, ஆஸ்திரேலியாவில் இருந்து 40 அரிய கலைப் பொருட்கள் மீட்டு வரப்பட்டன.ஆனால், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் ஒரே ஒரு கலைப்பொருள் மட்டும்தான் மீட்டு கொண்டு வரப்பட்டது.
ஒப்பந்தம்: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 46-வது உலக பாரம்பரிய கமிட்டி கூட்டத்தில், அரியகலைப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்துவதைத் தடுக்கஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் முதல் முறையாக இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி வருங்காலத்தில் இரு நாடுகளில் இருந்து அரிய பொருட்கள் கடத்தப்பட்டால், அவற்றை மீட்டு சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டது.