முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக வேந்தராக இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒவ்வோர் ஆண்டும் துணைவேந்தர்களுடன் உயர்கல்வி தொடர்பாக ஆலோசனை நடத்துவது வழக்கம். இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தது.
இதையடுத்து, மசோதாக்கள் குறித்து அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, வேந்தருக்கான அதிகாரத்தை ஆளுநருக்கு பதிலாக தமிழக அரசுக்கு வழங்குவது, சிண்டிகேட் உறுப்பினர்களை அரசே நியமிப்பது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சட்டத் திருத்தங்கள் உள்ளன.
இந்நிலையில், முதல்வரை பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக்கும் மசோதாவுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. இதையடுத்து, பல்கலைக்கழக திருத்தச் சட்டப்படி தற்போது எல்லா பல்கலைக்கழகத்துக்கும் வேந்தராக முதல்வரே செயல்படுவார்.
இந்நிலையில், தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் 16-ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாகமுதல்வர் தலைமையில் துணைவேந்தர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.