ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும்: ஆளுநர் மனோஜ் சின்ஹா தகவல்

0
85

ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும் என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால், காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் அம்மநில சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. வைஷ்ணவ தேவி கோயிலுக்கான ஆன்மிக யாத்திரையும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஜம்மு காஷ்மீர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, முதல்வர் உமர் அப்துல்லா கடந்த மாதம் அமைச்சரவை கூட்டத்தை பஹல்காம் பகுதியில் நடத்தினார். அத்துடன் சுற்றுலா தலங்களை பார்வையிட்டார்.

சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க வேண்டும் என காஷ்மீர் அமைச்சரவை அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம் உள்ளது.

இந்நிலையில், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காஷ்மீர் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சில சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளேன். பஹல்காமில் உள்ள பெடாப் பள்ளத்தாக்கு மற்றும் பூங்காக்கள், வெரினாக் தோட்டம், கோகெர்னாக் தோட்டம் மற்றும் அச்சபால் தோட்டம் ஆகியவை 17-ம் தேதி (நாளை) திறக்கப்படும்” என கூறியுள்ளார்.

இதனிடையே, கத்ரா, ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த ரயில் சேவை சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். இந்த ரயிலில் அடுத்த 10 நாட்களுக்கு பயணம் செய்வதற்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலத்தையும் பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். சுற்றுலாப் பயணிகள் இந்த பாலத்தின் மீது பயணிப்பதற்கான வாய்ப்பையும் இந்த வந்தே பாரத் ரயில் வழங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here