தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் போட்டிகள் வரும் ஜூலை 5-ம் தேதி தொடங்குகின்றன. இந்தத் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
உள்ளூர் வீரர்களின் திறனை கண்டறியும் இந்த தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. லீக் ஆட்டங்கள் திருநெல்வேலி, நத்தம், சேலம், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன. லீக் ஆட்டங்கள் ஜூலை 5 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகின்றன. பிளே ஆஃப் சுற்றின் இரு ஆட்டங்கள் தகுதி சுற்று 1, எலிமினேட்டர்) 30 மற்றும் 31-ம் தேதிகளில் நத்தத்தில் நடைபெறுகிறது.
தகுதி சுற்று 2 மற்றும் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5-ம் தேதி சேலத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, துணைத்தலைவர் ஆடம் ஷேட், கவுரவ செயலாளர் பழனி, கவுரவ இணைச் செயலாளர் சிவகுமார், கவுரவ உதவிச் செயலாளர் ஆர்.என்.பாபா, ஐஓபி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் குமார் ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்தனர். 2-வது இடத்தை பிடிக்கும்அணி ரூ.30 லட்சம் பெறும். 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட உள்ளது.