திருவிழாவுக்கு மின்விளக்கு கட்டும்போது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

0
39

விருதுநகர் அருகே கோயில் திருவிழாவுக்காக அலங்கார மின்விளக்குகள் கட்டும்போது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள காரிசேரியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று 45-வது நாள் மண்டல பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கிராமத்தில் ஒலிபெருக்கி மற்றும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

அதே ஊரைச் சேர்ந்த திருப்பதி அப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது கேபிள் டிவி வயருக்கு மேல் மின்விளக்கு வயரை அவர் தூக்கியபோது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பி மீது வயர் உரசியது. அப்போது, கையிலிருந்த வயரிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு திருப்பதி மீது மின்சாரம் பாய்ந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த 7 மாத கர்ப்பிணியான அவரது மனைவி லலிதா(25), பாட்டி பாக்கியம்(65), தம்பி தர்மர்(18), சித்தப்பா மகன் கவின் (15) ஆகியோர் திருப்பதியைக் காப்பாற்ற முயன்றனர். அப்போது 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் திருப்பதி, அவரது மனைவி லலிதா, மூதாட்டி பாக்கியம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் மகன் உள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், பலத்த காயமடைந்த தர்மர், கவின் ஆகியோரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here