குமரி மாவட்டம் தூத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பூத்துறை மீனவ கிராமத்தில் நேற்று காலை முதல் வெறிநாய் ஒன்று அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை வீடுகளுக்குள் புகுந்தும் சாலைகளில் நடந்து செல்லும் போது விரட்டி விரட்டி கடித்து காயப்படுத்தி உள்ளது. இதில் பச்சிளம் குழந்தை உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்தவர்கள் வரிசையாக தூத்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படையெடுத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் முதற்கட்டமாக பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி திரியும் வெறிநாயை பிடித்து மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.