நியூஸிலாந்து கிரிக்கெட் அணி கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என வென்றிருந்தது. முன்னதாக 2024-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் இந்திய அணி அடுத்த மாதம் இறுதியில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர் அக்டோபர் 22 முதல் நவம்பர் 15 வரை நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 19 முதல் 23 வரை வெலிங்டனிலும், 2-வது டெஸ்ட் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை கிறைஸ்ட்சர்ச்சிலும் நடைபெறுகிறது.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக உள்ளது. இதனால் இந்தத் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் புள்ளிகள் பட்டியலில் நியூஸிலாந்து 3-வது இடத்திலும், இந்தியா 5-வது இடத்திலும் உள்ளன. நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் ஒருநாள் போட்டி கேப்டனான மிட்செல் சாண்ட்னர் கூறும்போது, “இந்திய அணி இம்முறை பழிவாங்கும் யோசனையில் இருக்கலாம். இது சிறந்த தொடராக இருக்கும். இந்தியா போன்ற பெரிய அணிக்கு எதிராக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் அனைவரும் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
முதலில் 5 டி 20, 5 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இது அதிகம் என்றாலும், இது நல்ல தொடராக இருக்கும். அதன்பிறகு டெஸ்ட் போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியாவில் நாங்கள் விளையாடிய டெஸ்ட் போட்டிகளின் சூழ்நிலைகளில் இருந்து இவை சற்று வித்தியாசமாக இருக்கும். அனைத்து வடிவங்களிலும் இந்தியா இன்னும் மிகச் சிறந்த அணியாகவே திகழ்கிறது” என்றார்.















