உலகம் முழுவதும் ஜென்ஸீ கொந்தளிப்புக்கு காரணமான ‘கொள்கை’யும் பின்புலமும்!

0
32

‘படிச்ச பிள்ளைங்க எப்படியும் பிழைச்சுக்கும்’ என்பது கற்றறிந்தவர்களை சிறப்பாகக் கூறும் ஒரு தமிழ் பழமொழி. ஆனால் கற்றறிந்த இன்றைய இளம் தலைமுறையினரை பாதுகாப்பற்ற ‘கிக் வேலை’ (Gig job) செய்பவர்களாக மாற்றி உள்ளது ‘நியோலிபரலிசம்’ (Neoliberalism)  எனப்படும் புதிய தாராளமயம்.

பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டைக் குறைத்து, சந்தைக்கும் தனியார் – கார்ப்பரேட் துறைக்கும் முழுச் சுதந்திரம் வழங்குவதே புதிய தாராளமயத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன் மிக நவீன வடிவமே ‘கிக் பொருளாதாரம்’ (Gig Economy). இது ‘சுதந்திரமான வேலை நேரம்’, ‘சுய வேலைவாய்ப்பு’ என்ற  கவர்ச்சிகரமான பதங்களுடன் இளைஞர்களுக்கு மத்தியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மை முகம் முற்றிலும் வேறானது.

பணி பாதுகாப்பற்ற, ஓய்வூதியமும் மருத்துவக் காப்பீடு இல்லாத தற்காலிக வேலைகளில் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே வேலை செய்பவர்களாக இளைஞர்களின் உழைப்பைப் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுகின்றன.

ஐரோப்பாவின் செல்வசெழிப்பான வீதிகளில் உறைந்து கிடக்கும் வீட்டுவசதி நெருக்கடி (Housing Crisis), பணவீக்கம், விலைவாசி உயர்வு, வாழ்வாதாரப் பிரச்சினை, வேலையின்மை, தகுதிக்கேற்ற வேலை இல்லாமை போன்ற பிரச்சினைகளும், இந்தியாவின் கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற வாழ்வும் இரு வேறு துருவங்கள் இல்லை. திசைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவர்களின் கண்ணீர் கதை ஒன்றுதான். அவை ஒரே பொருளாதார மாதிரியின் இரட்டைக் குழந்தைகள்!

ஸ்பெயினிலும் பாரிஸிலும் வீதிகளில் இறங்கிப் போராடும் இளைஞர்களுக்கும், இந்தியாவில் விநியோக செயலிகளின் லாபத்துக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் இளைஞர்களுக்கும் இடையே உள்ள கவலை ஒன்றுதான் … “நாங்கள், எங்கள் பெற்றோரை விட ஏழையாக வாழத் தள்ளப்பட்டுள்ளோம்!” என்பதுதான் அது.

புதிய தாராளவாததின் தோல்வி?

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், அல்பேனியா ஏன் இந்தியாவிலும் கூட மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். முன்பு வங்கதேசம் மற்றும் இலங்கையிலும் இதே நிலைதான் நீடித்தது. உலகம் முழுவதும் இளைஞர்கள் ஏன் கோபமாக இருக்கிறார்கள்? உலகின் வடபகுதியில் (Global North) என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பிரான்ஸ் நமக்கான ஒரு சிறந்த உதாரணம்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் ஏறக்குறைய 10 ஆண்டுகால ஆட்சியில், அதிக வேலையின்மை, குறைந்த வளர்ச்சி, வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் சமூக நலச்செலவுக் குறைப்பு ஆகிய பொருளாதார சிக்கல்களை அந்நாடு சந்தித்துள்ளது.

பாரிஸின்  ‘லிசீ ஆன்டோயின்-டி-செயின்ட்-எக்ஸுபெரி’ (Lycée Antoine-de-Saint-Exupéry) பள்ளியில் தொடங்கிய மாணவர்கள் போராட்டம் தீப்பொறியாக மாறி இன்று நாடு முழுவதும் போராட்டம் பற்றி எரிகிறது.

இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது ‘நியோலிபரல்’ எனப்படும் புதிய தாராளமயப் பொருளாதாரமே. இது அரசு மக்களுக்காகச் செலவிடுவதைக் குறைப்பதையும், குறிப்பாக மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவுகளைக் கடுமையாகக் வெட்டுவதையும் தீவிரமாக அமல்படுத்தியது.

பிரான்ஸில் மேக்ரான், அமெரிக்காவில் ட்ரம்ப், பைடன் அல்லது கிளின்டனாகட்டும், பிரிட்டனின் ஸ்டார்மர் ஆகட்டும்… இந்தப் பொருளாதார மாதிரியை முன்னெடுத்த தலைவர்கள் அனைவரும் ஒன்று அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர் அல்லது அதிகாரத்தை இழக்கும் விளிம்பில் உள்ளனர்.

வேலையின்மைச் சிக்கல்

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகளவில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் அதிகரித்தாலும், ஜி7 நாடுகளில் அது உலக அளவினைப் போல் இருமடங்கு அல்லது அதற்கும் அதிகமாகவோ காணப்படுகிறது.

> அமெரிக்கா: ஒட்டுமொத்த வேலையின்மை 4.28 சதவீதம்; இளைஞர்களின் வேலையின்மை 7.7 சதவீதம்

> பிரிட்டன்: ஒட்டுமொத்த வேலையின்மை 4.9 சதவீதம்; இளைஞர்களின் வேலையின்மை 10.49 சதவீதம்.

> இத்தாலி: ஒட்டுமொத்த வேலையின்மை 6.13 சதவீதம்; இளைஞர்களின் வேலையின்மை 14.38 சதவீதம்.

> பிரான்ஸ்: ஒட்டுமொத்த வேலையின்மை 7.7 சதவீதம்; இளைஞர்களின் வேலையின்மை 15.38 சதவீதம்.

வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைந்து வரும் சூழலிலும் வேலையின்மை அதிகரித்து வருகிறது.  இதற்குக் காரணம் தொழிலாளர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது  இல்லை. மாறாக, அவர்களுக்கான தேவை குறைவாக இருப்பதுதான் என்பது தெளிவாகிறது.

புதிய தாராளவாத எழுச்சியும் நுகர்வின்மைச் சிக்கலும்

கடந்த 1970-களில் நிலவிய பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து, 1980-களில் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோரால் இந்த புதிய தாராளவாதம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் விளைவு:

அரசு தலையீடில்லாத சந்தை:

பொருளாதாரத்தில் அரசின் பங்கை முற்றிலும் குறைத்து, அனைத்துச் சேவைகளும் தனியார் சந்தையின் கைக்கு மாற்றப்பட்டன.

பொதுத்துறை விற்பனை:

கல்வி, மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து என மக்களின் அடிப்படைத் தேவைகள்  தனியார்மயமாக்கப்பட்டன.

தொழிலாளர் பாதுகாப்பு நீக்கம்:

தொழிற்சங்கங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, முதலாளிகளுக்குச் சாதகமான சட்டங்கள் இயற்றப்பட்டன.

புதிய தாராளவாதத்தின் மிக முக்கியப் பொருளாதார விளைவு குறைநுகர்வுச் சிக்கல் (Crisis of Underconsumption) ஆகும். இதைத்தான் இப்போது ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா, வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளிலுள்ள இளைஞர்களும் உணர்கிறார்கள்.

குறைவான சம்பளம் vs பணவீக்கம்:

தனியார்துறைக்கு லாபமே முக்கியம் என்பதால் தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை. ஆனால், பொருட்களின் விலையும் வாழ்க்கைச் செலவும் பல மடங்கு உயர்ந்தன.

வாங்கும் சக்தி குறைவு:

மக்களிடம் (குறிப்பாக இளைஞர்களிடம்) வாங்கும் திறன் (Purchasing Power) குறைந்ததால், சந்தையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க ஆளில்லாத சூழல் உருவாகிறது.

கடன் சூழல்:

குறைந்த ஊதியத்தால் மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கும் கல்விக்கும் கடன்களை நம்பத் தொடங்கினர். இது இறுதியில் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் முடக்கும் நுகர்வுச் சிக்கலாக மாறியது.

எதிர்காலம் குறித்த பயம்:

ஐரோப்பிய நாடுகளிலும் உலக அளவிலும் இளைஞர்கள் புதிய தாராளவாதத்தைத் தீவிரமாக வெறுப்பதற்கும், வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கும் தெளிவான காரணங்கள் உள்ளன.

வீடற்ற நிலை:

லண்டன், பாரிஸ், மாட்ரிட் போன்ற நகரங்களில் ரியல் எஸ்டேட் தனியார்மயமானதால், வீட்டின் வாடகை இளைஞர்களின் மாதச் சம்பளத்தில் 60-70 சதவீதம் வரை உறிஞ்சுகிறது. இதனால் சொந்த வீடு வாங்க முடியாமலும், தங்க இடமின்றி இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நலத்திட்டங்கள் முடக்கம்:

ஐரோப்பிய அரசுகள் இளைஞர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சமூகப் பாதுகாப்புச் செலவுகளைக் கடுமையாகக் குறைத்தது இளைஞர்களை கோபத்திற்கு ஆளாக்கியது.

எதிர்கால பயம்:

“எங்கள் பெற்றோர் எங்களை விட வசதியாக வாழ்ந்தார்கள். நாங்களோ அவர்களை விட ஏழையாக வாழ்கிறோம்” என்ற உணர்வு இளைஞர்களிடம் பெரும் கோபத்தையும் வெறுப்பையும் உருவாக்கியுள்ளது.

நாடுகளின் தோல்வி

புதிய தாராளவாதத்தின் ‘சோதனைக் கூடம்’ ஆக இருந்த சிலியில், 2019-ம் ஆண்டு இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் அரசியலமைப்பை மாற்றும் சூழலை உருவாக்கியது. அடுத்ததாக, கிரீஸ், ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் போன்றவைகளும் தோல்வியின் விளிம்பில் உள்ளன.

புதிய தாராளவாதம் சந்தைக்குச் சுதந்திரம் கொடுத்ததே தவிர, மனிதர்களின் அடிப்படை வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரவில்லை. சந்தையை நம்பிய கொள்கை பொய்த்துப் போனதால் ஜென்ஸீ தலைமுறையினர் மீண்டும் அரசின் நலத்திட்டம்,  சமூக நலன் சார்ந்த பொருளாதாரத்தை கோருகிறார்கள்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here