குவாதர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் அல்மாஸ்’ நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பான பலூச் விடுதலை முன்னணியின் செய்தித் தொடர்பாளர் மேஜர் குவாஹ்ரம் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் குவாதர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ‘ஆபரேஷன் அல்மாஸ்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் 80-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் உளவுத்துறைப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கை அக். 22-ம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் ராணுவ முகாம்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புச் சாவடிகள் ஆகியவை குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் 12 கவச வாகனங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகள் அழிக்கப்பட்டன. 2 கண்காணிப்பு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2 காவல் நிலையங்கள் கைப்பற்றப்பட்டன.
குவாதரில் உள்ள எல்லைப் பணிகள் அமைப்பின் முக்கிய முகாம் மற்றும் கப்த், ரிம்தான் பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மீது எங்கள் படையினர் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலின்போது, முக்கிய ராணுவ முகாம் 20 மணி நேரத்துக்கும் மேலாக எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. எனினும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சேதமடைந்த வாகனங்கள் விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.














