“பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து ரயில்வே கொள்கை வகுக்கும் மத்திய அரசு” – டி.ஆர்.பாலு சாடல்

0
97

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த ஒன்றிய அரசு, இன்றைக்கு ரயில்வே திட்டங்களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. இதயமே இல்லாமல் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போட்டிருக்கிறார்கள் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் 80 சதவிகித மக்களை மறந்துவிட்டு, பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து, ரயில்வே கொள்கை வகுத்து வருகிறது ஒன்றிய அரசு” என்று அவர் சாடியுள்ளர்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை இணைப்பது, இருப்புப் பாதைகள்தான். இதயமே இல்லாமல் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போட்டிருக்கிறார்கள்.பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் தரும் திட்டங்கள் ஒன்றுகூட இல்லாதது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிஹார், ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியவர்கள், தமிழ்நாட்டை வஞ்சித்தார்கள்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் போது, திருக்குறள் சொல்லுவார். இப்போது திருக்குறள் மட்டுமல்ல, தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகளே பட்ஜெட்டில் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டார்கள். இதனைக் கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தின.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த ஒன்றிய அரசு, இன்றைக்கு ரயில்வே திட்டங்களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பிறகு ரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரபூர்வமான பிங்க் புத்தகம் வெளியாகியிருக்கிறது. அதில்தான் தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுமே ரயில்வே பிங்க் புத்தகம் அவையில் வைக்கப்பட்டுவிடும். இதுகாலம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறையை இந்த பட்ஜெட்டில் ஏனோ பின்பற்றவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடர் முடித்த பிறகு பிங்க் புத்தகம் வெளியிட்டிருப்பதே இவர்களின் சதியை வெளிக்காட்டியிருக்கிறது.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குச் செய்த துரோகத்தைத் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது போல, புறக்கணிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களிலும் எதிர்ப்பார்கள் என அஞ்சியே, பிங்க் புத்தகத்தை வெளியிடாமல் பதுக்கி வைத்து, கூட்டத் தொடர் முடிந்த பிறகு வெளியிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒன்றிய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எல்லாம் வெறும் கலர் மத்தாப்புகள் என்பது அம்பலத்துக்கு வந்துவிடும் என அச்சப்பட்டிருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

நாட்டின் 80 சதவிகித மக்களை மறந்துவிட்டு, பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து, ரயில்வே கொள்கை வகுத்து வருகிறது ஒன்றிய அரசு. ரயில்வே திட்டங்களில் ஏழைகளைக் கண்டுகொள்வதே இல்லை. மறைமுக கொள்ளையை மறைக்கவே, தனியாகத் தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன் இணைத்தார்கள். பொது பட்ஜெட்டில் சேர்த்து, ரயில்வேயின் முக்கியத்துவத்தைக் குலைத்தது ஒன்றிய அரசு. ரயில் போக்குவரத்திடம் இருந்து ஏழைகள், நடுத்தர மக்களைத் தள்ளி வைத்து விட்டது ஒன்றிய அரசு. எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருக்கிறது ஏழைகளின் ரதம்.

ஆண்டுக்கு 10 சதவிகிதம் கட்டண உயர்வு, டைனமிக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை, ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் Cancellation கட்டணம் தொடர்ந்து உயர்வு, ஏழைகள் பயணிக்கவே முடியாத பகட்டான ரயில்களின் படங்களைக் காட்டி மக்களை ஏமாற்றியது, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டணச் சலுகையைப் பறித்தது, ஏழைகள் பயணிக்கும் ரயில்களை நிறுத்திவிட்டு, விளம்பரத்திற்காக இயக்கப்படும் ரயில்களுக்கு முக்கியத்துவம், குளிர்சாதன (ஏசி) ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஏழைகள் பயணிக்கும் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு என பத்தாண்டு பாஜக ஆட்சியில் மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டார்கள்.

இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டைத் துச்சமெனத் தூக்கியெறிந்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு முகமும் தேர்தலுக்குப் பிறகு இன்னொரு முகமும் காட்டியிருக்கிறது ஒன்றிய அரசு. தமிழ்நாடு – புதுச்சேரியின் 40/40 வெற்றியை திமுக கூட்டணி பெற்றதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலோடு நிதி ஒதுக்கீடுகளை எல்லாம் குறைத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு 976 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்து. ஆனால், இப்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அந்தத் தொகையை 301 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். அதாவது மூன்றில் ஒரு பகுதியாக்கிவிட்டார்கள்.

இரட்டைப்பாதை திட்டங்களுக்குத் தேர்தலுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 2,214 கோடி ரூபாய் இப்போது 1,928 கோடி ரூபாய் ஆக்கிவிட்டார்கள். புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதைத் திட்டங்கள் என அனைத்திலும் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதி அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை – மாமல்லபுரம்- கடலூர் கடற்கரைப் பாதைக்கு 25 கோடி ரூபாய் முன்பு ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி – இருங்காட்டுக்கோட்டை -ஆவடி லைனுக்கு முன்பு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததை வெறும் 18 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். இப்படிப் பல திட்டங்களுக்கு நிதி பெரும் அளவில் குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு. புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் நிதியைப் பெருமளவில் குறைத்தது இதுவரை ரயில்வே துறையில் நடக்காத ஒன்று.

புயலால் அழிந்து போன தனுஷ்கோடி ரயில் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குவதற்காக 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 2019 மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த பொதுத் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், திட்டம் இன்னும் வரவில்லை. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய ராமேஸ்வரம் – தனுஷ்கோடி திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒரு கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதனையும் இப்போது 56 லட்சம் ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். பிரதமர் அடிக்கல் நாட்டிய வெறும் 17 கிலோ மீட்டர் தூர இந்த ரயில் பாதையைக் கூட முடிக்காதவர்கள், எப்படி பெரும் ரயில்வே திட்டங்களை முடிப்பார்கள்?

தமிழ்நாட்டின் பரப்பளவு, மக்கள் தொகை, இருப்புப் பாதைகளின் நீளம், தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் நிதி ஆகியவற்றை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதிகூட கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டின் மொத்த இருப்பு பாதையின் நீளம் ம் 5,952 கிமீ அளவைவிடக் குறைவான இருப்புப் பாதைகள் கொண்ட மாநிலங்களுக்கு எல்லாம் நிதியை வாரி வழங்கிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை மதிக்கவே இல்லை.

இந்தியாவின் வரைபடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை இணைப்பது, இருப்புப் பாதைகள்தான். ஆனால், இதயமே இல்லாமல் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போடுவது போலப் போட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு 1 ரூபாய் வரி கட்டினால், நமக்கு 29 பைசாதான் கொடுக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் கொடுக்கிறார்கள்.

கோடிகளில் ஒதுக்கப்படும் ரயில்வே திட்டங்களுக்கு லட்சங்களை அல்ல, வெறும் ஆயிரங்களை ஒதுக்கித் தமிழ்நாட்டை ஓரங்கட்டியிருக்கிறார்கள். நான்கு வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த விழாவிற்குச் செய்த செலவு 5.6 கோடி ரூபாய் அளவுக்குக்கூட பெறத் தகுதியில்லாத மாநிலமா தமிழ்நாடு?

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தைத் தொடர்ந்து நான்காவதாக பெரம்பூரில் புதிய ரயில் முனையம் அமையப் போகிறது என சொன்னீர்களே… அவையெல்லாம் என்ன ஆகும் என்பது ஒன்றிய அரசுக்கே வெளிச்சம். கடந்த மூன்று ஆண்டுகளில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்கள் டிக்கெட்டை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வே துறைக்குக் கிடைத்த 1,229 கோடி ரூபாய் வருவாய் எல்லாம் எங்கே போனது?

ரயில்வே துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள பிபேக் தேப்ராய் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது மோடி அரசு. ‘அனைத்தையும் தனியாரிடம் கொடு’ என்ற தாரக மந்திரத்துடன் பல பரிந்துரைகளை அளித்தது பிபேக் தேப்ராய் குழு. அதன் பிறகுதான் ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் வேகமெடுத்தன. தனியார் ரயில்களைக் கொண்டு வந்தார்கள். இந்தத் திட்டங்களை எல்லாம் செயல்படுத்தத்தானோ என்னவோ தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களை ஒரேயடியாக அழித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டு இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள் என அஞ்ச வேண்டியிருக்கிறது.

ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டமான மெட்ரோ ரயில் திட்டங்களில் கூட தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்காமல் வஞ்சித்தனர். 2-ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இதுபற்றி மக்களவையில் தி.மு.க எழுப்பிய கேள்விக்கு, ’’சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்டப் பணிகள் தற்போதைக்கு மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது.

எனவே, அதற்கான செலவுகளைத் தமிழ்நாடு அரசே செய்கிறது” என்ற அதிர்ச்சி பதிலைத் தந்தார்கள். ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கினார்கள். ஆனால், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அதுகூட இல்லை என கையை விரித்துவிட்டார்கள். பாஜக கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் பூஜ்ஜியம் கொடுத்தற்காகத் தமிழ்நாட்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்குப் பூஜ்ஜியம் அளித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மெட்ரோவுக்கு ஒரு பைசாகூட வழங்காத ஒன்றிய அரசு, பாஜக ஆளும் பல மாநில மெட்ரோ பணிகளுக்குக் கோடிகளைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆட்சி அமைக்க வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஒரு அரசு செயல்படும். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காத பெண்களுக்கும் சேர்த்துதான் 1.15 கோடி மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு செயல்படுத்தி வருகிறது. அப்படித்தான் பாஜகவுக்கு எம்.பி-க்கள் தராத மாநிலங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் ஒன்றிய நிதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here