டெலிகிராம் மெசஞ்சரின் சிஇஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. டெக் துறை சார்ந்து இயங்கி வருபவர்கள் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதே நேரத்தில் அடிப்படையில் டெலிகிராம் மெசஞ்சர் குறித்து கொஞ்சம் அறிவோம்.
மென்பொருள் நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக இயக்குனர் பாவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உலக அளவில் டெலிகிராம் பயன்பாடு எப்படி உள்ளது போன்றவற்றை விரிவாக பார்ப்போம்.
டெலிகிராம்: கடந்த 2013-ல் அறிமுகமான மெசஞ்சர் செயலிதான் டெலிகிராம். இதனை பாவெல் துரோவ் மற்றும் அவரது சகோதரர் நிகோலா துரோவ் இணைந்து தொடங்கினர். நிதி மற்றும் ஐடியாலஜி சார்ந்த பணியை பாவெலும், டெக்னிக்கல் சமாச்சாரங்களை நிகோலாவும் கவனித்துக் கொள்கின்றனர்.
தனிநபர்களுக்கு இடையே, குரூப் மற்றும் சேனல்ஸ் என இதன் பயனர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இதன் குரூப் சேட்டில் இரண்டு லட்சம் பயனர்கள் வரை அனுமதிக்கப்படுகிறார்கள். துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெலிகிராம் தளத்தில் 950 மில்லியன் பயனர்கள் ஆக்டிவாக பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டாவின் வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் பெறுகின்ற பெரும்பாலான சேவையை இதிலும் பெற முடியும். பிரான்ஸ் நாட்டில் இந்த செயலி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அந்த நாட்டின் அதிபர் மாளிகை அதிகாரிகள் சிலர் கூட இந்த மெசஞ்சர் சேவையை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிக்கல் என்ன? – வாட்ஸ்அப், சிக்னல்ஸ் போன்ற மெசஞ்சர்களில் உள்ளது போல Encryption ஆப்ஷனை டெலிகிராமும் வழங்குகிறது. ஆனால், அது டீபால்டாக வழங்கப்படுவதில்லை. பயனர்கள் தங்கள் சேட்களை என்கிரிப்ட் செய்யும் ஆப்ஷனுக்கு மேனுவலாக தேர்வு செய்ய வேண்டும். அதோடு இது குரூப் சேட்களில் செயல்படாது. மேலும், குரூப் சேட்களில் இரண்டு லட்சம் பயனர்கள் வரை அனுமதிக்கப்படுகின்ற காரணத்தால் தவறான தகவல்கள், போலி செய்திகள் போன்றவற்றை எளிதில் பகிர முடியும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இது இரண்டும் காட்டுத் தீ போல மோசமானது. இந்த செயலியை தீவிரவாதிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்துவதாகவும் பிரான்ஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
பாதுகாப்பு குறைவு, கொள்கை அடிப்படையில் கொண்டுள்ள தளர்வுகள் மற்றும் சட்டவிரோத கன்டென்ட்களை இதில் கண்டறிவதும் சவால் என்கிறார் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் தியேல். கடந்த 2022-ல் உள்நாட்டு சட்ட விதிகளுக்கு உட்படாத காரணத்தால் சுமார் 5 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற குற்றச்செயல் தொடர்பான தரவுகளை ஒப்படைக்க தவறிய காரணத்தால் தற்காலிக தடையை எதிர்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.பாவெல் துரோவ்: 39 வயதான பாவெல் துரோவ், ரஷ்யாவில் பிறந்தவர். பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், செயின்ட் கிட்ஸ் குடியுரிமையை பெற்றவர். கடந்த 2006-ல் விகே (VKontakte) என்ற சமூக வலைதளத்தை ரஷ்யாவில் நிறுவனர். இதை ரஷ்ய மொழி பேசுபவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
2011-ல் ரஷ்யாவில் ஏற்பட்ட போராட்டத்தை தொடர்ந்து விகே-வில் இருந்த தனது பங்குகளை பாவெல் துரோவ் விற்பனை செய்தார். அப்போது ரஷ்ய அரசு தங்கள் தளத்துக்கு எதிர்க்கட்சி செயல்பாடு சார்ந்த சில விஷயங்கள் நீக்க சொல்லி அழுத்தம் கொடுத்ததாக அவர் சொல்லி இருந்தார். பயனர்களின் பிரைவசி மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய விரும்பும் தங்களது தளத்துக்கு துபாய் சிறந்த இடம் என்றும் அவர் ஒருமுறை தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் தான் டெலிகிராம் மூலம் நடைபெறும் சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போகிறது, குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியது மற்றும் பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை (ஆக. 24) பாவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்தது.
அஜர்பைஜான் நாட்டில் இருந்து விமானம் மூலம் பிரான்ஸ் வந்த அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு பிறகு, ஐரோப்பாவின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்துக்கு இணங்க ‘டெலிகிராம்’ செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது.
இந்தியாவில் டெலிகிராமுக்கு சிக்கல்? – பண மோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் டெலிகிராம் சார்ந்து பெறப்பட்டுள்ள புகார்கள் என்ன? நிலுவையில் உள்ள அந்த புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பரிசீலிக்க உள்துறை அமைச்சகத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் டெலிகிராம் மெசஞ்சருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.