தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கருணாநிதி பெயரில் புதிய விருது: தமிழக அரசு

0
72

தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கருணாநிதி பெயரில் ரூ.10 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கத்துடன் புதிய விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தொடர்பாக அத்துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலளித்துப் பேசும்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: பிற மொழி திணிப்பால் தமிழுக்கு வந்த ஆபத்தை எதிர்த்து தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிபோர் தியாகிகளை போற்றும் வண்ணம் 2025-ம் ஆண்டு முதல் ஜனவரி 25-ம் தேதி தமிழ் மொழி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு நினைவகங்களில் வீரவணக்கம் செலுத்தப்படும்.

தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3-ம் தேதி செம்மொழிநாள் விழாவாக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். தமிழறிஞர்களான ஆறு.அழகப்பன், ராமலிங்கம் என்ற எழில் முதல்வன் மற்றும் சோ.சத்தியசீலன், மா.ரா.அரசு , சு.பாலசுந்தரம், க.த.திருநாவுக்கரசு, இரா.குமரவேலன், கா.வேழவேந்தன் ஆகியோரின் நூல்கள் ரூ.91.35 லட்சம் செலவில் நாட்டுடைமையாக்கப்படும்.

சிறந்த நூல்களை எழுதும் நூலாசிரியருக்கான பரிசுத்தொகை ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாகவும், சிறந்த பதிப்பகத்தாருக்கான பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். கவிஞர் முடியரசனுக்கு சிவகங்கை மாவட்டத்தில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை நிறுவப்படும்.

தமிழுக்கு தொண்டாற்றுவோருக்கு கருணாநிதி பெயரில் ரூ.10 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கத்துடன் புதிய விருது வழங்கப்படும். சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டிட விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். டெல்லி தமிழ்ச்சங்கத்தின் கலையரங்கத்தை புனரமைக்க ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
சென்னை காந்தி மண்டபத்தில், சுதந்திர போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாருக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவச்சிலை நிறுவப்படும். மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை அமைக்கப்படும். சீகன் பால்குவுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும்.

தொல்லியல்துறை இயக்குநராக பணியாற்றிய சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சென்னையில் ரூ.50 லட்சத்தில் உருவச்சிலை நிறுவப்படும். அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கு கோவையில் ரூ.50 லட்சம் செலவில் உருவச் சிலை அமைக்கப்படும். முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு திருத்தணியில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை அமைக்கப்படும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு சென்னையில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை நிறுவப்படும்.

விவசாயிகளின் நலன்களுக்காக பாடுபட்ட கரூர் சி.முத்துசாமிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவச்சிலை அமைக்கப்படும். ரெட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளான ஜூலை 7-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும். சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் பிறந்த நாளான ஜுன் 1-ம் தேதி கரூர் மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

அப்துல்கலாம் பிறந்தநாள்: சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளான அக்டோபர் 9-ம் தேதி ராமாநாதபுரம் மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி சென்னையிலும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பிறந்த நாளான செப்டம்பர் 19-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத் திலும் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.