கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஒன்றில் தூத்தூரை சார்ந்த சகாயராணி என்பவர் அலுவலக பணியாளராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்தூர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு அதை வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு செய்து வாங்கி உள்ளார்.
அப்போது வங்கி கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் பண பரிவர்த்தனை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் சகாயராணி கூறியுள்ளார். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சகாயராணியை திடீரென பணியிட நீக்கம் செய்துள்ளது.
இதை கண்டித்தும், தவறான பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், கடந்த ஐந்தாண்டு கணக்குகளை முழுமையாக தணிக்கை செய்ய வேண்டும், வங்கியில் இருந்து பண பரிவர்த்தனை செய்த 10 லட்ச ரூபாய் மீண்டும் வங்கியில் போட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்தூரில் நேற்று (செப்.,12) காலை முதல் மாலை வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜான் அலோசியஸ் தலைமை வகித்தார். கொல்லங்கோடு நகராட்சி 32 வது வார்டு திமுக கவுன்சிலர் ஷிபா, அட்வகேட் ஜோஸ் பில்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக ஊழியர் சகாயராணி உட்பட ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.