தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணி தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் தெரு நாய்கள், செல்லப்பிராணிகளை பராமரிப்பது தொடர்பாக, விலங்கு நல தொண்டு நிறுவனம், தெரு நாய்களை பராமரிக்கும் தன்னார்வலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தெரு நாய்களை மேலாண்மை செய்வது குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளை செயல்படுத்துவது குறித்தும், பொதுமக்கள் மற்றும் நாய்களுக்கு உணவு அளிக்கும் தன்னார்வலர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.
தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புளியந்தோப்பு, கண்ணம்மாப்பேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், செட்டிமேடு (2 மையங்கள்), திருவொற்றியூர், மாதவரம், பெருங்குடி மற்றும் கண்ணப்பர் திடல் என 11 இடங்களில் நாய் இனக்கட்டுப்பாடு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
40 நாய் பிடிக்கும் வாகனங்கள், 336 நாய் பிடிக்கும் பணியாளர்களால் நாளொன்றுக்கு சுமார் 200 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூடுதலாக அம்பத்தூர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 4 இடங்களில் நாய் இனக்கட்டுப்பாடு மையங்கள் தொடங்குவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் சித்ரா விஜயன், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.















