சென்னை: இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டு,பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, விசிக துணை பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி,ஆளூர் ஷா நவாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலுக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:
உலக நாடுகள் அச்சப்படும் அளவுக்கு சூழல் உருவாகி உள்ளது. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரையே இஸ்ரேல் அச்சுறுத்துகிறது. இதை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்துள்ளன. இந்தியாவும் கண்டிக்க வேண்டும்.
இந்தியா, இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும். எல்லா ஆட்சிக் காலத்திலும்பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகத்தான் இந்தியா இருந்திருக்கிறது.தற்போது நிலை மாறியுள்ளது.
சென்னையின் பூர்வீக வாசிகளுக்கு பாதுகாப்பு தருகிறோம் எனக் கூறி செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் பகுதிகளுக்கு அழைத்துப்போய் விட்டுவிடுகிறார்கள். அதுபோலதான் பாலஸ்தீனத்திலும் நடக்கிறது. இஸ்ரேலுக்கு 45 சதவீதம் இடம் கொடுத்தார்கள். தற்போது90 சதவீத இடத்தை கைப்பற்றிவிட்டார்கள். பாதிக்கப்படுவோர் பக்கம் நிற்பதுதான் உண்மையான நீதி. இவ்வாறு அவர் பேசினார்.