அமெரிக்காவின் சியாட்டில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி; 5 பேர் காயம்

0
14

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். சியாட்டில் சென்டரில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறையின் கைது நடவடிக்கை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இதுகுறித்து சியாட்டில் காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சியாட்டில் சென்டரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் விரைவில் வெளிவரும். தயவுசெய்து அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்கவும்’ என்று தெரிவித்துள்ளது.

‘பைட் ஆஃப் சியாட்டில்’ உணவுத் திருவிழாவின் போது, சியாட்டில் சென்டரில் மாலை 6 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. காயமடைந்தவர்கள் ஹார்பர்வியூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான உள்ளூர் உணவு விற்பனையாளர்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளுடன், சியாட்டில் சென்டர் தனது வருடாந்திர ‘பைட் ஆஃப் சியாட்டில்’ திருவிழாவை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு குறித்த தகவல்களைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் ஏராளமான காவல்துறையினரும், மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதனைத் தொடர்ந்து, மக்களை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தின்போது பதிவான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில், பரபரப்பான அந்த அரங்கில் துப்பாக்கிச் சூடு சத்தமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமும் பதிவாகியுள்ளது. அந்த இடத்தில், ஏழு முதல் 8 முறை துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், மக்கள் நாலா பக்கங்களிலும் சிதறி ஓடிக்கொண்டிருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சியாட்டில் வருடாந்திர உணவுத் திருவிழா 1982-ல் தொடங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் உணவு, பானம் மற்றும் பல கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்த நிகழ்வில் 3,50,000 பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here