மேற்குவங்க பொது விநியோக திட்டத்தில் ரூ.10,000 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்குவங்கத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாஜகான் ஷேக் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஜனவரி 5-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், சந்தேஷ்காலியில் உள்ள அவரது வீட்டுக்கு சோதனையிட சென்றனர். அப்போது 200 பேர் கும்பல், அதிகாரிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் பல அதிகாரிகள் காயமடைந்தனர். இது தொடர்பாக ஷாஜகான் மீது மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த பிப்ரவரி 29-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கீழமை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முன்னதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரித்த மேற்குவங்க உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி தாக்குதல் தொடர்பாக சிபிஐ மற்றும் மாநில போலீஸார் இணைந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “சிபிஐ, மேற்குவங்க காவல் துறை இணைந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
ஷாஜகான் ஷேக்கை செவ்வாய்க்கிழமையே சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி சிபிஐ அதிகாரிகள் நேற்று கொல்கத்தாவில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்தும் மாநில போலீஸார் ஷாஜகானை ஒப்படைக்கவில்லை. இதனால் சிபிஐ அதிகாரிகள் வெறுங்கையோடு திரும்பினர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத் தில் முறையிடுவோம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
14 சொத்துகள் முடக்கம்: இதனிடையே அமலாக்கத் துறை சார்பில் ஷாஜகானுக்கு சொந்தமான 14 அசையா சொத்துகள் நேற்று முடக்கப்பட்டன. இதன்படி அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள், விவசாய நிலம், இறால் பண்ணை, காலி மனை உள்ளிட்டவை முடக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.12.78 கோடி ஆகும். அவரது 2 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ஷாஜகான் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.