மணிப்பூரில் அம்மாநில அரசின் அனுமதி இல்லாமல் இடங்களின் பெயரை மாற்றினால் இனி 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இது தொடர்பான மசோதா கடந்த திங்கள்கிழமை மணிப்பூர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மலைகள், ஏரிகள் உட்பட முக்கிய இடங்களின் பெயர்களை அரசின் அனுமதி இல்லாமல் மாற்றும் போக்கு காணப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், ‘மணிப்பூர் இடங்களின் பெயர்கள் 2024’ மசோதா கொண்டுவரப்பட்டது. இம்மசோதா கடந்த திங்கள்கிழமை அம்மாநில நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின்படி, அரசின் அனுமதி இல்லாமல் இடங்களின் பெயரை மாற்றினால் 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இது குறித்து அம்மாநில முதல்வர் பிரேன் சிங் கூறுகையில், “நம் முன்னோர் நமக்குவிட்டுச் சென்ற கலாச்சார, பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் மணிப்பூர் அரசு உறுதியாக இருக்கிறது. அரசின் அனுமதி இல்லாமல் இடங்களின் பெயர்களை மாற்றுவதை மணிப்பூர் அரசு சகித்துக்கொள்ளாது. மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தின் மலைகள், ஏரிகள், ஆறுகள், வரலாற்றுத் தலங்கள் உள்ளிட்டவற்றின் பெயர்களில் மாற்றம் தேவையா என்பதை ஆராய தனிக் குழு அமைக்கப்படும். பெயர் மாற்றம் குறித்து அந்தக் குழு முடிவு எடுக்கும்” என்று தெரிவித்தார்.