வன்முறையற்ற வாக்கு பதிவை உறுதி செய்யவும்: மேற்கு வங்க ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

0
131

மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலின்போது பாரபட்சமற்ற மற்றும் வன்முறையற்ற வாக்குப் பதிவை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்எஸ்.பி.க்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் தயார் நிலை குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேர்தலில் அச்சம், மிரட்டல்போன்றவற்றுக்கு இடமில்லை. அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இதை நாங்கள் தெளி வாக கூறிவிட்டோம். மிரட்டல் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி.க்களிடம் கூறியுள்ளோம். அவர்களும் உறுதிஅளித்துள்ளனர்.

அவர்கள் செயல்படவில்லை என்றால், அவர்களை செயல்பட வைக்க என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். போலீஸ் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து கட்சியினருக்கும் ஏற்ற சூழலை அவர்கள் மாவட்ட அளவில் உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்க கூடாது. மேற்கு வங்கத்தில் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக மத்திய பாதுகாப்பு படைகள் போதிய அளவில் முன்கூட்டியே அனுப்பப்பட்டுள்ளன. அபாயம் உள்ள பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆலோசித்து மத்திய படைகள் அனுப்பப்படும்.

தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் வாக்குச் சாவடி மையங்களை பார்வையிட வேண்டும். தவறுகள் ஏதும் நடைபெறுகிறதா என தேர்தல் ஏஜென்ட்களிடம் கேட்க வேண்டும். தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், தங்களின் தபால் ஓட்டுக்களை வாக்காளர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும்.

வாக்காளர் அடையாள துண்டு சீட்டுகள் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும். வாக்காளர்கள் சரியான முகவரியில் உள்ளனரா என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். கள்ள ஓட்டு போடுவதையும் தடுக்க வேண்டும். எந்த கட்சியாவது புகார் தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் 24 மணி நேரமும் 3 அடுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் பணிமற்றும் சட்டம் ஒழுங்கு பணியில்தன்னார்வலர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுத்தக் கூடாது.பிரச்சாரத்துக்கான மைதானங்களை ஒதுங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். போலி செய்திகள் வந்தால் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here