திருமலையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்: ஆந்திர டிஜிபி அறிவுரை

0
238

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருமலையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா அறிவுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா தலைமையில் நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆவண வீடியோவை திருப்பதி எஸ்பியும், தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரியுமான (பொறுப்பு) ஹர்ஷவர்தன் விளக்கினார்.

அதன்பின்னர், டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா பேசியதாவது: திருமலை உலக பிரசித்தி பெற்ற ஒரு திருத்தலமாகும். ஆதலால், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இங்கு பாதுகாப்பை அதிகரிப்பது அவசியம்.

ஆந்திர போலீஸ் படை, ஆயுதப்படை, சிவில் போலீஸார், ஊர்காவல் படை, தேவஸ்தான கண்காணிப்பு படை, ஆக்டோபஸ் கமாண்டோக்கள் இருந்தாலும், அத்தியாவசிய சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ள தேசிய, மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் இருத்தல் அவசியம். திருமலையில் 24 மணி நேரமும் பாதுகாப்பில் கவனம் தேவை. வாகனங்களை 3 அடுக்கு சோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அலிபிரி சோதனை சாவடியில் ராணுவத்துடன் இணைந்து சோதனை செய்யும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

நூதன தொழில்நுட்ப முறையில் வாகன சோதனை இருக்க வேண்டும். வாகனம் முழுவதும் ஸ்கேன் ஆகும்படியான உபகரணங்கள் இதற்காக உபயோகப்படுத்த வேண்டும். சைபர் குற்றங்களுக்காக தனிப்படை அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு ஹரீஷ்குமார் குப்தா பேசினார்.

தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் கூறுகையில், “ஒருங்கிணைந்த பாதுகாப்பு கமிட்டி அமைப்பது, சைபர் குற்றங்களை தடுக்க தனி கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை விரைவில் அமல் படுத்தப்படும்” என்றார்.

இக்கூட்டத்தில் கூடுதல் டிஜி (சட்டம்-ஒழுங்கு) சுதாகர் ரெட்டி, கூடுதல் டிஜி (இண்டெலிஜென்ஸ்) மஹேஷ் சந்திரா லட்டா, டிஐஜி அனந்தபூர் சியாமஷ், திருப்பதி மாவட்ட வனத்துறை அதிகாரி விவேக் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here