சம்ஸ்கிருத அறிஞர் ராமபத்ராச்சார்யா, உருது கவிஞர் குல்சாருக்கு ஞானபீட விருது

0
175

1965-ம் ஆண்டு முதல், அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளில் இலக்கியத்தில் சிறந்து விளங் கும் ஆளுமைகளுக்கு மத்திய அரசின் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான விருதை ஞானபீட தேர்வுக் குழு நேற்று முன்தினம் அறிவித்தது. மிகச் சிறந்த உருதுக் கவிஞர்களில் ஒருவராக அறியப்படுபவர் குல்சார் (89). பஞ்சாப்பில் பிறந்த அவரது படைப்புகளுக்காக 2002-ம்ஆண்டு அவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் குல்சார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இவர் எழுதிய ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு 2008-ம் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதுவரையில் 5 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். இந்தித் திரைப்படங்களில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2013-ம் ஆண்டு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

ஜகத்குரு ராமபத்ராச்சார்யா (74) இந்து ஆன்மீக குருவாக அறியப்படுபவர். 100-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருக்கும் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1950-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் பிறந்த ராமபத்ராச்சார் யாவுக்கு இரண்டு மாதக் குழந்தையாக இருக்கும்போதே கண்பார்வை பறிபோய்விட்டது. செவிவழியாக கற்றுத் தேர்ந்தார். 22 மொழிகள் பேசும் திறன்கொண்ட இவர், சம்ஸ்கிருதத்தில் பாடல்கள் இயற்றியுள்ளார். ஆன்மிக அறிஞர், தத்துவவியலாளர், எழுத்தாளர், கல்வியாளர், பாடலாசியர் என பன்முகம் கொண்டவர்.

ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.21 லட்சம் பரிசுத் தொகையும், வாக்தேவி சிலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ஞானபீட விருது சம்ஸ்கிருத மொழிக்கு 2-வது முறையாகவும், உருது மொழிக்கு 5-வது முறையாகவும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here