நாட்டை ஆளும் மாநில முதல்வர்களின் மக்களின் செல்வாக்கு மற்றும் மாநில வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெரும்பான்மையான மக்களின் செல்வாக்கை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு 52.7 சதவீத ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது இடம் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு கிடைத்துள்ளது. அவர் மாநிலத்தில் 51.3 சதவீத மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பிடித்துள்ளார். அவர் 48.6 சதவீத மதிப்பீட்டை பெற்றுள்ளார். நான்காவது இடத்தை 42.6 சதவீத மக்கள் ஆதரவுடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பிடித்துள்ளார்.
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா 41.4 சதவீத மக்கள் ஆதரவுடன் மதிப்புமிக்க முதல்வர்களின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் இவர் திரிபுரா மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் செல்வாக்கு பெற்றவராக திகழ்கிறார்.
மாணிக் சாஹாவின் எளிமை, அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் அவரது தலைமையின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்காக திரிபுரா மக்கள் அவரை மக்களின் முதல்வர் என்றே பெருமையுடன் அழைக்கின்றனர். தங்களுடைய இன்பத்திலும், துன்பத்திலும் பங்குகொள்ளும் இரக்கமுள்ள தலைவராக மாணிக் சாஹா விளங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
திரிபுரா தொழிலதிபர் ஒருவர் கூறுகையில், “மாணிக் சாஹா எந்த வகையான பிரச்சினைகளையும் தீர்க்க அவர் எந்த நேரத்திலும் தயாராக உள்ளார். பழங்குடியின அடித்தட்டு மக்களுக்காக நேர்மையான முறையில் அவர் பணியாற்றி வருகிறார். மக்களின் நலன் முன்னேற்றத்தில் அர்பணிப்புடன் செயலாற்றி வரும் மாணிக் சாஹாவுக்குத்தான் என்னைப் பொருத்தவரையில் முதலிடம் கிடைக்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்ற எளிய முதல்வரை பார்த்ததில்லை என்றார்.
பிரபல பல் மருத்துவரான மாணிக் சாஹா மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல்வாதியாக மாறியவர். 2016-ல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து அந்த கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்.