பிரபல நடிகையான சமந்தா சின்னத்திரையில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். சோனி லிவ் மற்றும் சோனி விழா சேனல்களில் இந்நிகழ்ச்சி வெளியாக இருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் இதில் பங்கேற்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்காக புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி பற்றி சமந்தா கூறும்போது, ‘‘இந்த நிகழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நான் இதுவரை செய்த நிகழ்ச்சிகளில் இருந்து முற்றிலும் வேறுவகையில் இந்த ‘செலிபிரட்டி மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி இருக்கிறது.
அதுதான் இந்த நிகழ்ச்சியை ‘வேண்டாம்’ என்று சொல்ல முடியாத அளவு என்னை வெகுவாக ஈர்த்தது. உணவு என்பது மக்களை ஒன்றிணைக்கும், அழகான நினைவுகளை உருவாக்கும், நம்முடைய மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தும் அற்புதமான ஆற்றல் கொண்டது.
நமக்குப் பிடித்த தமிழ் பிரபலங்கள் சமையலறைக்குள் வந்து புதிய முயற்சிகளை எடுத்து,தங்களையே ஆச்சரியப்படுத்தி அதிக ஆர்வத்துடனும் உணர்வுடனும் போட்டியிடுவதைப் பார்ப்பதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.















