திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ரூ.68 கோடியில் விடுதி, கட்டிடங்கள்: காணொலியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

0
60

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் கிருஷ்ணாபுரம், அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில் ரூ.5.81 கோடி மதிப்பில் 4 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.68.36கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 2,226 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,755 கோடி மதிப்பிலான 7,005.70 ஏக்கர் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.5,433.56 கோடி மதிப்பிலான 20,607 திருப்பணிகளில் 9,083பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல்: அந்த வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தொடர்புடைய கிருஷ்ணாபுரம், வெங்கடாஜலபதி கோயிலில் ரூ.2.35 கோடி மதிப்பில் தெப்பக்குளம் சீரமைப்பு, ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக அன்னதானக்கூடம் கட்டுதல், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.1.50 கோடி மதிப்பில் வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும்பணி மற்றும் ரூ.96 லட்சத்தில் சரவணப் பொய்கையில் செயற்கைநீருற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகியபூங்காவாக புதுப்பொலிவுடன் புனரமைக்கும் பணி, என மொத்தம் ரூ.5.81 கோடியிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.29.16 கோடி மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமை பெறாமல் இருந்தன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், பக்தர்களின் நலன்கருதி கூடுதல் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.19.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம், ரூ.48.36 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்து வைத்தார்.

மேலும், பெருந்திட்ட வரைவின்கீழ் ரூ.10 கோடியி்ல் அமைக்கப்பட்ட முடி காணிக்கை மண்டபம்,ரூ.6 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள், ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் எனமொத்தம் ரூ.68.36 கோடி மதிப்பிலான 4 முடிவுற்ற பணிகளை முதல்வர் நேற்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி.,தலைமைச்செயலர் நா.முருகானந்தம், துறையின் செயலர் பி.சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.தர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here