ஆண்டுக்கு ரூ.30 கோடி: விளம்பர பலகைகளுக்கு உரிமம் வழங்க சென்னை மாநகராட்சி திட்டம்

0
48

சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விளம்பரப் பலகைகளை நிறுவுவது விதிமீறலாகும்.

எனவே, சென்னை மாநகராட்சி நிர்வாகம் மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது. இதுவரை 460-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. அதில் 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அஸ்திவாரத்தோடு அகற்றப்பட்டுள்ளன.

இதனிடையே, மாநகராட்சியின் விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி வழங்கும் குழு சில தினங்களுக்கு முன்பு கூடியுள்ளது. இதில், விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வேண்டி வழங்கப்பட்ட 1,100 விண்ணப்பங்களைப் பரிசீலித்தது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு அனுப்பி, விளம்பரப் பலகை வைக்க உள்ள கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல் துறையின் தடையின்மை சான்றும் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விரு சான்றுகள் கிடைத்த பிறகு, விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30 கோடி வருவாய் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.