கல்பாக்கம் சுற்றுப்புற கடலோர பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஒத்திகை: ஈசிஆர் சாலையில் தீவிர வாகன சோதனை

0
37

கல்பாக்கம் மற்றும் சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட கடலோர கிராமப் பகுதிகளில் சாகர் கவாச் ஒத்திகையாக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈசிஆர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக, ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் இணைந்து சாகர் கவாச் எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை 4 மற்றும் 5-ம் தேதி என இரண்டு நாட்களாக நடைபெற உள்ளது.

இதில், ஒத்திகையின் முதல்நாளான இன்று (செப்.4), செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமப்பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் போலீஸார் கடற்கரையில் தீவிர ரோந்து மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் மற்றும் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள கல்பாக்கம் பகுதிக்கு செல்லும் சாலையில், சதுரங்கப்பட்டினம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கல்பாக்கம் உள்பட கடலோர கிராமப்பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, தீவிரவாதிகள் போல் கடல் வழியாக ஊடுருவ முயலும் நபர்களை பிடிக்கும் ஒத்திகையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கடற்கரையில் கண்காணிபு்பு மற்றும் சோதனைகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் ஈடுபட்டு வரும் நிலையில், சதுரங்கப்பட்டினம், வெங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஈசிஆர் சாலையில் போலீஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here