சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பள்ளி கட்டிடத் திறப்பு விழாக்களில், மேயர் ஆர்.பிரியா மற்றும் திருவிக நகர் எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வெளிப்படையான மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி, திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் மேயர் ஆர்.பிரியா, திருவிக நகர் எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி மற்றும் கல்வித்துறை இணை ஆணையர் கற்பகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலில் புளியந்தோப்பு மன்னார்சாமி கோயில் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அப்போது, மேயர் பிரியா ரிப்பனை வெட்டுவதற்கு முன்பாகவே, அவருக்கு பின்னால் நின்றிருந்த எம்எல்ஏ பல்லவி ரிப்பனை வெட்டினார்.
இதனைத் தொடர்ந்து வகுப்பறையில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் பிரியா விளக்கேற்றிய பின், அடுத்ததாக நின்றிருந்த எம்எல்ஏ-விடம் மெழுகுவர்த்தியை வழங்காமல், அவருக்கு அடுத்து நின்றிருந்த ஐஏஎஸ் அதிகாரி கற்பகத்திடம் வழங்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த எம்எல்ஏ பல்லவி, அதிருப்தியுடன் நிகழ்ச்சியைப் பாதியிலேயே புறக்கணித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
எம்எல்ஏ-வை அதிகாரிகள் சமாதானம் செய்ததை அடுத்து, நம்மாழ்வார்ப்பேட்டை சின்னபாபு தெருவில் நடைபெற்ற அடுத்த பள்ளி கட்டிடத் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றார்.
இந்த விழாவில், முந்தைய சம்பவத்துக்கு சமாதானம் செய்யும் வகையில், மேயர் பிரியா விளக்கேற்றிவிட்டு மெழுகுவர்த்தியை எம்எல்ஏ பல்லவியிடம் நீட்டினார். ஆனால், புளியந்தோப்பு சம்பவத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, எம்எல்ஏ பல்லவி அதனை வாங்க மறுத்துவிட்டார்.
அதிகாரிகள் வற்புறுத்தியும் அவர் விளக்கேற்ற முன்வராத நிலையில், அவரது ஆதரவாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரு சம்பவங்களும் அங்கிருந்தவர்களிடையே திகைப்பை ஏற்படுத்தியது.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதுகுறித்து, எம்எல்ஏ பல்லவி கூறுகையில், “மேயர் என்னை அவமதிக்கும் எண்ணத்துடன்தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அவர் அவ்வாறு நடந்து கொண்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்றார். மேயர் பிரியா கூறுகையில், “அரசு நடைமுறைப்படி, மேயர் என்ற அடிப்படையில் முதலில் நான் குத்துவிளக்கேற்றினேன்.
அதற்குப் பிறகு ஐஏஎஸ் அதிகாரியும், அவரைத் தொடர்ந்து எம்எல்ஏ-வும் விளக்கேற்ற வேண்டும். அந்த மரபுதான் அங்கும் பின்பற்றப்பட்டது. அவரை நாங்கள் அவமரியாதை செய்யவில்லை. அவர்தான் வேண்டு மென்றே பிரச்சினையை ஏற்படுத்துகிறார்” என்றார்.















