மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் செயல்படும் டிசிஎஸ் நிறுவனத்தில் பெண் ஊழியர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் அவர்களை கட்டாய மத மாற்றம் செய்ததும் கடந்த ஏப்ரலில் வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக 8 டிசிஎஸ் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
டிசிஎஸ் நிறுவனத்தைப் போன்று மகாராஷ்டிராவின் புனே நகரில் செயல்படும் விப்ரோ நிறுவனத்திலும் மதமாற்ற முயற்சி நடைபெற்றிருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் புனேவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இந்து மதத்தை சேர்ந்தவள். புனேவில் உள்ள விப்ரோவில் பணியாற்றியபோது ஷகீனா ரபீக் அறிமுகமானார்.
இந்து மதத்தில் இருந்து விலகி முஸ்லிம் மதத்துக்கு மாறுமாறு அவர் வலியுறுத்தினார். ஷேக் என்பவருடன் நெருங்கி பழகுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். முஸ்லிம் மதத்துக்கு மாறினால் துபாயில் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று ஆசைவார்த்தைகளை கூறினார்.
இந்த விவகாரம் குறித்து விப்ரோ உயரதிகாரிகளிடம் முறையிட்டேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஷகீனாவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் என்னை பழிவாங்க தொடங்கினர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் என்னை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விப்ரோ நிறுவனம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும். ஷகீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு விப்ரோ நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
விப்ரோ விளக்கம்
இதுகுறித்து விப்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விவகாரம் குறித்த போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். வழக்கு விசாரணையில் இருப்பதால் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ஊழியர்களின் பாதுகாப்பு, சுயமரியாதைக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.















