நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்த 2 மசோதாக்களும் மக்களவையில் தோல்வியடைந்தன. ஆனால் இந்த முறை, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி), உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) ஆகியவற்றின் உட்கட்சிப் பூசல்களும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் திடீர் மனமாற்றமும் சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை. இச்சூழலில் திமுகவை தங்கள் பக்கம் ஈர்க்க என்டிஏ திட்டமிட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவை விரிவாக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்த ஒரே கட்சி திமுக ஆகும். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட தென்னிந்திய மாநிலங்கள், தொகுதி மறுவரையறையால் மக்களவை இடங்களை இழக்க நேரிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாதிடுகிறார். திமுகவின் இந்த எதிர்ப்பு நிலைப்பாட்டால், கடந்த ஏப்ரலில் அந்த மசோதா தோல்வி அடைந்தது.
ஆனால், கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக தற்போது ஆட்சியில் இல்லை. காங்கிரஸுடனான அதன் பல்லாண்டு உறவும் மோசமடைந்துள்ளது. இத்தகைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், இந்த 2 மசோதாக்களையும் நிறைவேற்றுவதில் மோடி அரசு திமுக மீது தனி நம்பிக்கை கொண்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
கடந்த முறை இந்த மசோதாவுக்கு மக்களவையில் இருந்த 528 உறுப்பினர்களில், 298 பேர் ஆதரித்தும் 230 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். தற்போது என்டிஏ.வுக்கு மக்களவையில் 299 உறுப்பினர்கள் உள்ளனர். இத்துடன் டிஎம்சியின் 20 எம்.பி.க்கள் ஆதரவால் இந்த எண்ணிக்கை 319 ஆகவும் தற்போது பேச்சுவார்த்தை நடத்திவரும் சரத் பவார் கட்சியின் 8 எம்.பி.க்களை சேர்த்தால் இது 327 ஆகவும் உயரும்.
இதனிடையே கடந்த ஏப்ரலில் 5 என்டிஏ அல்லாத எம்.பி.க்கள் ஆதரவு அளித்ததன் அடிப்படையில் மொத்த எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. மக்களவையில் மொத்தம் 543 எம்.பி.க்கள் உள்ள நிலையில், மூன்றில் 2 பங்கு பெரும்பான்மைக்கு 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே, அரசுக்கு மேலும் 28 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படும். இதனால், திமுகவின் ஆதரவு இல்லாமல் இந்த பெரும்பான்மையை அடைவது கடினம். திமுகவின் 22 எம்.பி.க்களின் நேரடி அல்லது மறைமுக ஆதரவு கிடைத்தால் மட்டுமே மசோதா எளிதாக நிறைவேறும் சூழல் உள்ளது.
இதற்காக திமுகவுடன் பாஜக தலைமை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் திமுக சார்பில் சில சிக்கல்களை தீர்க்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மசோதா மீதான நிலைப்பாடு குறித்து திமுக இன்னும் எந்த முடிவும் எடுக்காவிட்டாலும் மத்திய அரசுடன் ஒரு மென்மையைக் காட்டுகிறது. எனவே இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்காவிட்டாலும் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்கும் என்று ஆளும் என்டிஏ அரசு நம்புகிறது.















