“இளைஞர்களுக்கு எதிரான பிரதமர்” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்

0
27

இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சிஜேபி அமைப்பின் கீழ் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். 

டெல்லி காவல்துறையினரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்து முன்னேறியதால், அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதோடு, தடியடியும் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி தான். சிஜேபி அமைப்பும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் முக்கியக் கோரிக்கையாக முன்வைக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கூட கோர முடியாத அளவிற்குப் பிரதமர் இளைஞர்களுக்கு எதிராக இருக்கிறார். 

நாட்டில் இதுவரை நடந்துள்ள 152 வினாத்தாள் கசிவுகளால் சுமார் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடும் சூழலில், நியாயமான கேள்விகளை எழுப்பும் உழைக்கும் இளைஞர்களுக்கு இந்த அரசு தடியடியையே பரிசாக அளித்துத் தண்டித்து வருகிறது. இந்த அரசு இளைஞர்களின் நலனைப் பேணத் தவறியது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிராகவே முழுமையாகத் திரும்பிவிட்டது.

இந்த நாடு பெரும்பான்மையான இளைஞர்களைக் கொண்ட ஒரு நாடாகும். டெல்லியின் தெருக்களில் இறங்கிப் போராடி வரும் இந்த இளம் வாலிபர்களும் பெண்களும் ஒன்றும் குற்றவாளிகள் அல்லர். அவர்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள். தங்களை மதிக்கக்கூடிய, நேர்மையான மற்றும் திறம்படச் செயல்படக்கூடிய ஒரு கல்வி முறை தங்களுக்கு வேண்டும் என்பதுதான் அவர்களின் உரிமையாகும்.

அவர்கள் செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை. ஆனால், இந்த அரசு செய்வதும் காவல்துறை செய்வதும் முற்றிலும் அருவருப்பானது. மாணவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதும், தடியடி நடத்துவதும் ஜனநாயக முறை அல்ல. இது இந்தியாவின் வழிமுறையும் அல்ல; இப்படியான செயல்கள் மூலம் இந்த விவகாரத்தைக் கையாண்டிருக்கக் கூடாது” இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் இந்த மாணவர் போராட்டத்திற்குத் தங்களது ஆதரவை வழங்கியுள்ள நிலையில், போராட்டத்தின் தீவிரத்தைக் குறைக்கும் நோக்கில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா சிஜேபி அமைப்பின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here