முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ கைது

0
44

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18-ம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கீதாஜீவன், தலைமைக் கழகப் பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர் மீது புகார் அளிக்க தவெகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர். ஆனால் புகார் எதுவும் வழங்காமல் திரும்ப சென்று விட்டனர். தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் புகார் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் மற்றும் திரளான போலீஸார் இன்று காலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர் காலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். போலீஸார் எம்.எல்.ஏ.விடம் கைது செய்ய வந்தது குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று தயாராகி வெளியே வந்தார். அதற்குள் தகவல் அறிந்து எம்எல்ஏ வீட்டு முன்பு திரளான திமுகவினர் திரண்டனர்.

அவரை கைது செய்து வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தபோது, போலீசார் தங்களது வாகனத்தில் தான் ஏற்றினர். இதை கண்டித்து திமுகவினர் வாகனத்தை மறித்து அமர்ந்து கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி விட்டு மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here