தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்ணாமலை தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பது பரபரப்புச் செய்தியாக இருக்கும் நிலையில், “அவர் தனிக்கட்சி முடிவில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்போது அவர் அறிவிக்கப் போவதில்லை. புதன் மாலை 7 மணி வரைக்கும் டெல்லியிலிருந்து சென்னை திரும்புவதற்கு அண்ணாமலை ரிட்டர்ன் டிக்கெட் எடுக்கவில்லை. அதனால் இன்று அவர் சென்னை வருவதே சந்தேகம் தான்” என்று உறுதிபடச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள்.
இதுகுறித்து நம்மிடம் மேலும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர்கள், “தமிழகத்தில் புதிதாக ஒரு கட்சி வரப்போகிறது என இரண்டு நாட்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் போட்ட பதிவைப் பார்த்திருப்பீர்கள். அது அண்ணாமலையை மையப்படுத்தி வந்த செய்திதான். கரூரைச் சேர்ந்த ஒரு நபர் தேர்தல் ஆணையத்தில் புதிதாக ஒரு கட்சியை பதிவுக்கு சமர்ப்பித்திருக்கிறார்.
‘தமிழக மக்கள் கழகம்’ அல்லது ‘தமிழக மக்கள் கட்சி’ என்ற பெயரில் இந்தக் கட்சி பதிவுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கட்சியைத்தான் அண்ணாமலை கையில் எடுக்கப் போவதாக பேச்சு இருக்கிறது. ஆனால், இது சம்பந்தமாக தனக்கு நெருக்கமான வட்டத்தில் கூட யாரிடமும் அண்ணாமலை இதுவரை மூச்சுவிடவில்லை.
இதற்கு நடுவே, ரஜினியை மூன்று முறை தனியே சந்தித்துப் பேசி இருக்கிறார் அண்ணாமலை. இந்தத் தகவல் கசிந்து தான், அண்ணாமலையுடன் ரஜினியும் கைகோக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
எங்களுக்குத் தெரிந்து, ‘எனக்காக நீங்கள் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்’ என்று தமிழக அரசியல் தலைவர்கள் சிலருக்கு ‘ஸ்டார்’ நடிகர் ஒருவர் வேண்டுகோள் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய்யின் வருகையை அண்ணாமலை மூலமாக சமன் செய்யமுடியும் என அந்த ‘ஸ்டார்’ நினைக்கிறார். அவரிடம் சில உத்தரவாதங்களை வாங்கிக் கொண்டே அண்ணாமலை களத்தில் இறங்கி இருப்பதாகத் தெரிகிறது.
உண்மையில் அண்ணாமலை பாஜக-வை விட்டு விலகுவதற்காக டெல்லி செல்லவில்லை. ஏனென்றால், பாஜக-வில் இருந்து யாரும் யாரையும் விலக்க முடியாது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்படி புதுப்பிக்காவிட்டாலே அவர்கள் பாஜக உறுப்பினர்களாக தொடர முடியாது. தனக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிரிவு பாதுகாப்பை திரும்பப்பெற வேண்டும் என மத்திய உள்துறையிடம் கடிதம் கொடுக்கவும் ஒப்புக்காக தனக்கு வழங்கப்பட்ட தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்காகவும் தான் டெல்லி சென்று நிதின் நவீனையும், அமித் ஷாவையும் சந்தித்திருக்கிறார் அண்ணாமலை.
அப்போது பாஜக-வில் தனக்கு ஏற்பட்ட சங்கடங்களையும் இருவரிடமும் விளக்கி இருக்கிறார். இருவரும் அண்ணாமலையை சமாதானம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த முயற்சி தோல்வி அடைந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையில், அண்ணாமலை பாஜக-வில் இருந்து விலகிவிட்டதாக டெல்லி மீடியாக்கள் செய்தியை பரப்பிவிட்டன. இந்த செய்திகள் வெளியானதுமே தமிழகத்தில் உள்ள அண்ணாமலை ஆதரவு மாவட்டப் பொறுப்பாளர்கள் சிலர், தாங்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக சமூக வலைதளங்களில் செய்திகளை பதிவிட்டார்கள்.
இதிலுள்ள ஆபத்தை உணர்ந்து மீண்டும் அண்ணாமலைக்கு அமித் ஷாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அப்போது, ‘நீங்கள் தனி இயக்கம் தொடங்குவதாக இருந்தால் பாஜக நிர்வாகிகளை எக்காரணம் கொண்டும் உங்கள் பக்கம் சேர்க்கக் கூடாது’ என்று அமித் ஷா கட்டளையிட்டதாகத் தெரிகிறது” என்று சொன்னார்கள்.
“அண்ணாமலை இன்னும் ஒரு ஆறு மாத காலத்துக்கு அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப் போகிறார். அந்த அவகாசத்தில், தான் ஏற்கெனவே நடத்தி வரும் ‘வீ லீடர்ஸ்’ அறக்கட்டளையின் செயல்பாடுகளை விசாலப்படுத்தி அதைத்தான் ஒரு அரசியல் இயக்கமாக மாற்றும் திட்டத்தில் இருக்கிறார்” என்று சொல்லும் இன்னொரு தரப்பினர், “சமூக வலைதளத்தில் அண்ணாமலைக்காக பேசுபவர்கள், ஆட்டோ, பேருந்து, கிரிக்கெட் மட்டை, வேன் என நாலைந்து சின்னங்களை பதிவிட்டு ‘இதில் தலைவரின் புதிய கட்சியின் சின்னமாக எதை வைக்கலாம் என்று உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்’ என ஆழம் பார்க்கிறார்கள்” என்கிறார்கள்.
ராம சீனிவாசன் புதிய தலைவர்?
இதற்கிடையே, கட்சியின் மூத்த தலைவர் ராம சீனிவாசன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் கசிகின்றன. பல மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு சம்மதித்தால் நயினார் நாகேந்திரன் மத்திய அமைச்சராக்கப்படலாம் என்றும் கட்சியின் அமைப்புச் செயலாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்படலாம் என்றும் பாஜக வட்டாரத்தில் ஒரு செய்தி றெக்கை விரிக்கிறது.















