நேற்றைய போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்த பிறகு அந்த அணியை ட்ரோல் செய்யும் மீம்கள் சமூக வலைதளங்களை சுனாமி போல ஆக்கிரமித்துள்ளன
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர்களை நோக்கி விராட் கோலி அமைதியாக இருக்கச் சொல்லி சைகை செய்த வீடியொ விவாதத்தை கிளப்பியது. அதே போல போட்டியின்போது அவர் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
போட்டி முடிந்தபிறகு மைதானத்துக்கு வெளியே ஆர்சிபி ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று, சிஎஸ்கே ரசிகர்களை சூழ்ந்து கொண்டு கேலி செய்யும் வீடியோக்களும் வைரலாகின.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்த பிறகு அந்த அணியை ட்ரோல் செய்யும் மீம்கள் சமூக வலைதளங்களை சுனாமி போல ஆக்கிரமித்துள்ளன. நேற்று முதல் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் ஆர்சிபி அணியை கிண்டலடிக்கும் மீம்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
பதிலுக்கு ஆர்சிபி ரசிகர்களும் தங்கள் மீம் திறமையை வெளிப்படுத்தி பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்களை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் அந்த இலக்கை கடந்தது. இந்த வெற்றியின் மூலம் நாளை சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும்.