38 வயது, 17-வது ஐபிஎல் சீசன்… மிளிரும் தினேஷ் கார்த்திக்!

0
62

தோனி என்ற ஒரு நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் ஏற்படவில்லை எனில் தினேஷ் கார்த்திக் என்ற ஒரு நுண் திறன் படைத்த வீரர், தலைமைத்துவத்திற்கான அருமையான மூளை கொண்டவர், எத்தனைப் போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கும் போது தினேஷ் கார்த்திக்கை நினைத்து வருந்தாமல் இருக்க முடியாது.

ஐபிஎல் 2024 சீசனில் ஆர்சிபி வெளியேறியது. தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 326 ரன்களை 187.35 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். பவர் ப்ளேயில் ஆடி 741 ரன்கள் எடுத்த விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 154 தான், அதே போல் ரோஹித் சர்மாவின் ஸ்ட்ரைக் 417 ரன்களை இந்த சீசனில் எடுத்தாலும் ஸ்ட்ரைக் ரேட் 150 என்ற அளவில்தான் உள்ளது.

ஆனால் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டி20 உலகக் கோப்பை அணியில் இருக்கிறார்கள். இதுதான் இந்திய அணித் தேர்வுக்குழுவின் புரியாத புதிர். மேலும் ருதுராஜ் 583, ரியான் பராக் 567, சாய் சுதர்ஷன் 527 ஆகியோர்களும் டி20 உலகக் கோப்பை அணியில் இல்லை. இதுவும் இந்திய அணித் தேர்வுக்குழுவுக்கே உரிய விசித்திர தர்க்கமே.

தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக 24 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள், 60 டி20 போட்டிகள் என்று 180 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்திய அணிக்காக ஆடிய தோனியின் டி20 ஸ்ட்ரைக் ரேட் 98 போட்டிகளில் 126.13 தான். ஆனால் தினேஷ் கார்த்திக் 60 போட்டிகளில் 142.61 என்ற ஸ்ட்ரைக் ரேட். டெஸ்ட் போட்டிகளில் அவர் வித்தியாசமான டவுன்களில் இறங்கினார். ஆனால் ஒன்றாம் நிலையில் 5 போட்டிகளில் 333 ரன்களை 47.57 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இவரும் வாசிம் ஜாஃபரும் இங்கிலாந்தில் ஓப்பனிங்கில் இறங்கி ஆடிய போது இருவரும் சேர்ந்து 50 என்ற சராசரியில் ரன்களை எடுத்தனர்.

பங்களாதேஷுக்கு எதிராக பங்களாதேஷில் தன் ஒரே சதமான 129 ரன்களை எடுத்தார். 2, 6, 7, 8 ம் நிலைகளில் இறங்கியுள்ளார். இதில் 7ம் நிலையில் 416 ரன்களை எடுத்துள்ளார்.

180 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் 94 முறை தோனி அணியில் இருக்கும் போது ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக இறங்கியுள்ளார். இவர் நிலையான டவுனில் இறக்கப்படவில்லை. இஷ்டபட்ட டவுனில் மேக் ஷிஃப்ட் பிளேயராக பயன்படுத்தப்பட்டதால் அவரால் தன் கரியரை குறிப்பிட்ட இன்னிங்ஸ்களுக்காக திட்டமிட முடியாமல் போய் விட்டது. கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த போது தினேஷ் கார்த்திக்கைத்தான் கேப்டன்சி மூளை கொண்டவர் என்றார். தலைமையேற்று நடத்தும் நிதானம் பொறுமை, சாமர்த்தியம் கிரிக்கெட் திறமைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தோனியை விட 4 வயது சிறியவர் தினேஷ் கார்த்திக். டெஸ்ட்டிலும் ஒருநாள் போட்டியிலும் தோனியைக் காட்டிலும் ஓர் ஆண்டு முன்னதாகவே இந்திய அணிக்குள் வந்தவர். தென் ஆப்பிர்க்காவுக்கு எதிராக முதல் டி20-யில் இந்தியா வென்ற போது தினேஷ் கார்த்திக், தோனி இருவரும் இருந்தனர். தினேஷ் கார்த்திக் அப்போட்டியில் ஆட்ட நாயகன்.

ஐபிஎல் போட்டிகளை எடுத்துக் கொண்டால் உண்மையில் தினேஷ் கார்த்திக் 6 வித்தியாசமான ஐபிஎல் அணிகளில் ஆடியுள்ளார். ஒவ்வொரு சீசனிலும் தன் பேட்டிங் திறமைகளை வளர்த்துக் கொண்டே வந்தார். அபிஷேக் நாயரிடம் பயிற்சியைப் பெற்று புதுவிதமான ஷாட்களை ஆடத்தொடங்கினார்.

அதுவும் இந்த சீசனில் அவர் ஆடிய ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்கள் எண்ணற்றவை. அதே போல் ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து கொண்டு பைன்லெக் திசையில் அடித்த ஷாட்கள் ஏராளம். எதிரணி கேப்டன்களை களவியூகம் செய்ய திணறடித்தார். பவுலர்களை தன் கிரீஸ் நகர்தல்கள் மூலம் குழப்பி ரன்களைக் குவித்தார். டிவில்லியர்ஸ் இல்லாத குறையை தினேஷ் கார்த்திக் ஆர்சிபி ரசிகர்களுக்குப் போக்கினார். இந்த முறை அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ட்மேனில் தினேஷ் ஆடிய ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்களும் மற்றவர்களை விட அதிகம்.

உண்மையில் இவர் அளவுக்கு பரிசோதனை முயற்சி ஷாட்களை அதிக அளவு பயன்படுத்தும் வீரர்கள் இல்லை என்றே கூறி விடலாம். தோனி இருப்பதே போதும் என்று நினைப்பவர். கார்த்திக் அதே வேளையில் புது முயற்சிகளில், புதுமை புகுத்துவதில் சோர்வடையாதவர். இந்த முறை ஸ்பின் பவுலிங்கில் கார்த்திக் ஆட்டமிழக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்திய அணிக்காக ஆடுவதில் தோனியின் கதை 2019 உலகக் கோப்பையுடன் நிறைவுற தினேஷ் கார்த்திக் டி20களில் இந்திய அணிக்காக நீடித்தார். இப்போதும் கூட ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோருடன் இவர் பெயரும் உலகக் கோப்பை செலக்‌ஷனில் பரிசீலிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. என்ன இருந்தாலும் தோனி என்ற ஒரு நிகழ்வினால் தினேஷ் கார்த்திக்கின் திறமை சரிவர பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய் விட்டது என்பது இந்திய கிரிக்கெட்டில் ஒரு வருத்தகரமான விஷயமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here