ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் டெல்லி போலீஸ் குறுக்கு விசாரணை நடத்துவது பற்றி டெல்லிபோலீஸ் தரப்பு கூறியதாவது: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக தான் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்ததாக ஸ்வாதி மலிவால் விசாரணையில் தெரிவித்தார். ஆகவேதான் அவர்களிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் 2 நாள் அவகாசம் கேட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
இதுபற்றி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவு: நேற்று (22 மே) எனது பெற்றோரை அலைபேசியில் அழைத்த போலீஸார் அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அவகாசம் கேட்டிருந்தனர். ஆனால், போலீஸ் வருமா வராதா என்பது பற்றி முறையான எந்த தகவலும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. நான் எனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் போலீஸ் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி அமைச்சர் ஆதிஷி கூறும்போது, “கேஜ்ரிவாலின் வயதான பெற்றோரை டெல்லி போலீஸ் குறுக்கு விசாரணை செய்ய திட்டமிட்டிருப்பது காவல் துறை அறநெறிகளை மீறக்கூடிய செயலாகும். கேஜ்ரிவாலின் தந்தையால் துணையின்றி நடக்க முடியாது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரது தாயார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் மோடி அரசு கேஜ்ரிவாலையும் அவரது பெற்றோரையும் குறிவைத்துத் தாக்கி உளவியல் ரீதியாக அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சி செய்கிறது” என்றார்.