மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி முதல்வராக பதவி வகித்து வருபவர் ஏக்நாத் ஷிண்டே. ஏக்நாத் தலைமையி லான சிவசேனாதான் உண்மையான சிவசேனா என்று தலைமைத் தேர்தல் ஆணையமும் அறிவித்துவிட்டது. இந்நிலையில் அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா விலகி, முதல்வர் ஏக்நாத் தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின்போது மத்திய அமைச்சராகவும் மிலிந்த் தியோரா பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில் மிலிந்த் தியோராவுக்கு, சிவசேனா கட்சித்தலைவர்கள் மாநிலங்களவை எம்.பி. சீட்டை வழங்கியுள்ளனர்.மிலிந்த் தியோராவின் தந்தையான முரளி தியோரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர். சிவசேனாவில் இணைந்தது குறித்து மிலிந்த் தியோரா கூறியதாவது: கட்சியும் வளராமல் நாட்டையும் வளர்க்காமல் காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.
ஆனால் இப்போது பிரதமர் மோடியின் ஆட்சி, சாதனைகள் அனைத்தையும் குறை கூறி வருகிறது.காங்கிரஸ் தனது கொள்கைகளில் இருந்து விலகி சாதிப் பிளவுகளை கட்சியில் வளர்க்கிறது. மேலும் வணிக நிறுவனங்களை குறிவைத்தும் குற்றம்சாட்டி வருகிறது. எனவேதான் காங்கிரஸிலிருந்து விலகி சிவசேனாவில் சேர்ந்தேன். தற்போது எனக்கு மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு வழங்கியுள்ளார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.