மாநிலங்களவை தேர்தலில் தெ.தேசம் போட்டியில்லை சந்திரபாபு நாயுடு திட்டவட்டம் என். மகேஷ்குமார் அமராவதியில் உள்ள தனது வீட்டில், தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘இம்முறை கண்டிப்பாக தெலுங்கு தேசம் கட்சி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடாது.
ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால், தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே நாம் லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல எம்.பி., எம்எல்ஏக்கள் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் தெலுங்கு தேசம் ‘சீட்’ கொடுக்க இயலாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டணி, கட்சி தாவி வரும் இதர கட்சியினரால் நமது கட்சிக்காக உழைத்து வரும் தொண்டர்களுக்கு அநீதி இழைக்க வேண்டி வரும். ஆதலால் இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.