காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தேர்தலில் விவிபாட் இயந்திரங்கள் அதிகளவில் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க, தேர்தல் ஆணையத்திடம் இண்டியா கூட்டணி கடந்தாண்டு ஜூன் முதல் நேரம் கேட்டு வருகிறது. 100 சதவீத விவிபாட் இயந்திரங்களை அனுமதிக்கவில்லை என்றால், அது இந்திய வாக்காளருக்கு மிக மோசமான விஷயமாக இருக்கும்.
விவிபாட் இயந்திரங்களுடன் கூடிய வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டே தெரிவித்தது.
ஆனால், இது தொடர்பாக ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் தயங்குவது, இன்னும் அதிக கேள்விகளை எழுப்புகிறது. முழுமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில்நுட்ப விஷயத்தில் தேர்தல் ஆணையம் அதிக பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.