மாநிலங்களவை தேர்தல் பாஜக வேட்பாளர் பட்டியல்: நட்டா, அஷ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் போட்டி

0
266

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் எல்.முருகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது.

இதையடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன்படி, கடந்த 8-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் வரும் 15-ம் தேதி முடிவடைய உள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் குஜராத் (4), மகாராஷ்டிரா (3), ஒடிசா (1), மத்திய பிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவிலிருந்து போட்டியிடுகிறார். இவர், கடந்த 2019-ம் ஆண்டைப் போலவே அம்மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் 5 இடங்கள் காலியாக உள்ளன. இதற்காக, மத்திய தகவல் ஒலிபரப் புத் துறை இணையமைச்சர் எல்.முருகன், உமேஷ் நாத் மஹராஜ், மாயா மரோலியா மற்றும் பன்சிலால் குர்ஜார் ஆகிய 4 பேர் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது. மற்றொரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

குஜராத் மாநிலத்திலிருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கோவிந்த்பாய் தொலாக்கியா, மயாங்க்பாய் நாயக் மற்றும் டாக்டர் ஜஷ்வந்த் சிங்பார்மர் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.

இதுபோல மகாராஷ்டிரா மாநிலம் சார்பில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நேற்று முன்தினம் பாஜகவில் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் சவான், மேதா குல்கர்னி மற்றும் டாக்டர் அஜித் கோப்சதே ஆகிய 3 பேர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.பி.நட்டா இப்போது இமாச்சல பிரதேசம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ஆனால் அங்கு போட்டியிடுவதற்கு தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் குஜராத்திலிருந்து போட்டியிடுகிறார். அங்கு காலியாக உள்ள ஓரிடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

இந்த தேர்தலில் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் முருகன் ஆகியோர் தேர்வானால், இருவரும் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிப்பார்கள். எல்.முருகன் தவிர ம.பி. சார்பில் போட்டியிடும் மற்ற 3 பேர் புதுமுகங்கள் ஆவர்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கலாம் விரைவில் முடிய உள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட 3 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், தர்மேந்திர பிரதான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்கள் சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர் பட்டியலை கடந்த 11-ம் தேதி பாஜக வெளியிட்டது. இதில் இப்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள பூபேந்திர யாதவ் பெயர் இடம்பெறவில்லை. அவர் மக்களவைத் தேர்தலில் களமிறக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here