சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் மழை

0
28

சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை, புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

நேற்று சென்னை, புறநகர் பகுதிகளில் காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. பின்னர் மாலை நேரத்தில் இருள் சூழ்ந்து, புறநகர் பகுதிகளான திருப்போரூர், தாம்பரம், கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர், புழல், அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

அதனைத் தொடர்ந்து மாநகரப் பகுதிகளான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், வேப்பேரி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெரம்பூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், மாதவரம், கிண்டி, கோயம்பேடு, பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

பலத்த காற்று வீசியதால், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மாநகரப் பகுதியில் போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல்கள் மீது போடப்பட்டிருந்த வலைகள் காற்றில் சுருண்டு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. மாலை நேரத்தில் பெய்த மழையால், மாநகர், புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியாக ரம்மியமான சூழல் நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here