மும்பை ரயில் விபத்தைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதத்துக்குள் தானியங்கி கதவுகளுடன் கூடிய புறநகர் ரயில் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ராவில் நேற்றுமுன்தினம் கூட்ட நெரிசல் காரணமாக இரண்டு ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்த பயணிகள் ஒருவருக்கொருவர் மோதி தண்டவாளத்தில் விழுந்தனர். இதில், ரயில்வே காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து, ரயில்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலான மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ரயில்வே நிர்வாகம் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மும்பை புறநகர் ரயில்களில் வரும் நவம்பர் மாதத்துக்குள் தானியங்கி கதவுகளை பொருத்தி அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்குள் அவற்றின் சேவையை தொடங்கி வைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மூத்த ரயில்வே வாரிய அதிகாரிகளுடன் இணைந்து சென்னை ஐசிஎப் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, தானியங்கி கதவு முறையில் உள்ள சவால்களுக்கு நடைமுறை தீர்வுகளை உருவாக்குமாறு அமைச்சர் அவர்களிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து மத்திய ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கதவுகள் மூடப்பட்டிருந்தாலும் இயற்கையான காற்றோட்டத்தை அனுமதிக்கும் ரயில் பெட்டிகளில் கதவுகள் வடிவமைக்கப்பட இருக்கின்றன. இரண்டாவதாக, பெட்டிகளுக்குள் புதிய காற்றை அனுமதிக்க ஏதுவாக ரயில் மேற்கூரையில் காற்றோட்ட அலகுகள் நிறுவப்படும். மூன்றாவதாக, ரயிலுக்குள் கூட்டத்தை சிறப்பாக பகிர்ந்து கொள்வதையும், பயணிகள் சுதந்திரமான நடமாட்டத்தையும் உறுதி செய்ய ரயில் பெட்டிகளுக்கு இடையில் வெஸ்டிபுல்ஸ் எனப்படும் தாழ்வாரங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய ரயில்வேயில் 7 ஏசி பெட்டிகள் உட்பட 157 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோன்று, மேற்கு ரயில்வேயில் 8 ஏசி ரயில்கள் உட்பட மொத்தம் 95 புறநகர் ரயில்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன.