குமரி மாவட்டம் புதுக்கடை வழியாக குமரியின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு தேங்காபட்டணம் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் முஞ்சிறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏராளமான குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குமரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் தாமிரபரணி ஆறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் புதுக்கடை அருகே மங்காடு ஆற்றுப் பகுதி வழியாக பைக் மற்றும் சொகுசு கார்களில் இரவு வேளைகளில் வந்து செல்பவர்கள் கழிவு பொட்டலங்கள், பழைய துணிகள், அழுகிய பூக்களை ஆற்றில் வீசி விட்டு செல்கின்றனர்.
தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் தேங்கி நிற்கும் இந்த கழிவு பொருட்களால் தண்ணீர் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் நேரடி கவனம் செலுத்தி, ஆற்றில் கழிவு பொட்டலங்களை வீசி செல்லும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.