மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவை சேர்ந்த 1,500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து பல்கலைக்கழகத்துக்கு எதிரே அதிமுகவினர் கடந்த 26-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீரென சாலை தடுப்பின் மீது ஏறி, தமிழக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 900 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதேபோல, வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் 600 பேர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.
ஒட்டுமொத்தமாக 1,500 பேர் வரை கைது செய்யப்பட்டனர். அனுமதி இன்றி ஒன்றுகூடியது மற்றும் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அனைவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.